திருப்பூர் காசிபாளையம் ரோடு பகுதியை சேர்ந்த மோகன்ராஜ் என்பவரது மகன் சரத் ராகவ் (வயது 19). இவர் சென்னையில் உள்ள தனியார் கல்லூரியில் சி.ஏ.படித்து வந்தார். கொரேனா வைரஸ் காரணமாக கல்லூரிகள் மூடப்பட்டதால் ஆன்லைன் வகுப்பில் படித்து வந்துள்ளார். அப்போது ஆன்லைனில் தேர்வு எழுதி உள்ளதாக கூறப்படுகிறது. அதில் அவர் குறைந்த அளவு மதிப்பெண் எடுத்துள்ளார். இதனால் மாணவன் சரத் ராகவ் மனமுடைந்து காணப்பட்டார். உடனே அவருடைய பெற்றோர் அவருக்கு ஆறுதல் கூறினர்.
இந்த நிலையில் நேற்று மதியம் வெளியே சென்று வீடு திரும்பிய சரத்ராகவ் வீட்டின் படுக்கை அறைக்கு சென்று கதவை உள்பக்கமாக தாழிட்டுக் கொண்டார். நீண்ட நேரமாகியும் கதவு திறக்கப்படவில்லை.
இதையடுத்து கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது சரத்ராகவ் தூக்கில் தொங்கிய நிலையில் இருந்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த அவருடைய பெற்றோர் அவரை மீட்டு அங்குள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சரத்ராகவை பரிசோதனை செய்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து திருப்பூர் ஊரக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஆன்லைன் தேர்வில் மதிப்பெண் குறைவாக எடுத்ததால் மாணவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.