மதுரை: மைசூர் ஆய்வகத்தில் உள்ள தமிழ் பாரம்பரிய சின்னங்கள் கல்வெட்டுகள் முறையாக பாதுகாக்கப்படுகிறதா என ஆய்வு செய்து அறிக்கை அளிக்க 5 பேர் கொண்ட குழு அமைத்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் கண்டெடுக்கப்படும் பாரம்பரிய சின்னங்கள், கல்வெட்டுகள் கர்நாடகாவில் உள்ள மைசூரில் கல்வெட்டியல் ஆய்வகத்தில் வைத்து பராமரிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் நமது தொன்மையான நாகரிகத்தை அறிய உதவும் இந்த பொருட்கள் அண்டை மாநிலத்தில் வைக்கப்படுவதால் முறையாக பராமரிக்கப்படுவதில்லை என்றும் இதனால் தமிழகத்தில் வைத்து பராமரிக்க உத்தரவிட கோரியும் இளஞ்சலியன் என்பவர் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு நீதிபதி குருபாகரன் தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, மத்திய அரசு தரப்பில்,' மைசூரில் வைக்கப்பட்டுள்ள கல்வெட்டுகள் அனைத்தும் முறையாக, பாதுகாப்பாக பராமரிக்கப்பட்டு வருகின்றன'என தெரிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து நீதிபதிகள்; முனைவர்கள் ராஜவேலு, சாந்தலிங்கம், மார்க்சிய காந்தி, பத்மாவதி மற்றும் தமிழக தொல்லியல் துறையில் பணியில் இருக்கும் கல்வெட்டியல் அலுவலர் ஆகியோர் மைசூரில் உள்ள கல்வெட்டியல் மையத்திற்கு சென்று அங்கு தமிழ் கல்வெட்டுக்கள் அனைத்தும் முறையாக படிமம் எடுக்கப்பட்டுள்ளதா? பாதுகாக்கப்பட்டுள்ளதா?

முறையாக வரிசை எண்கள் அளித்து பராமரிக்கப்படுகிறதா? அவற்றில் ஏதேனும் சேதம் ஏற்பட்டுள்ளதா? எத்தனை கல்வெட்டுகள் உள்ளன? அவை எவ்வாறு பராமரிக்கப் படுகின்றன? என்பது தொடர்பாக ஆய்வு செய்து ஜனவரி மாதம் 2-ம் வாரத்தில் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டனர்.