கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் உடல்கள் தகனம் செய்யப்படுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து மேன்முறையீட்டு நீதிமன்றிலும் ரிட் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் உடல்களை தகனம் செய்யும் நடவடிக்கைக்கு நாடளாவிய ரீதியாக பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன.

இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து ஏற்கனவே உயர் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், தற்போது மேன்முறையீட்டு நீதிமன்றிலும் ரிட் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அரசியலமைப்பின் 140 ஆவது அத்தியாயத்துக்கு அமைவாக, உடல்கள் எரிக்கப்படுவதற்கு உடனடியாக தடை உத்தரவை பிறப்பிக்கக் கோரி, இந்த ரிட் மனு சிரேஷ்ட சட்டத்தரணி கௌரி சங்கரி தவராசா ஊடாக தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

தலையில் காயத்திற்குள்ளாகி கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் மரணித்த தனது தந்தையை, கொரோனாவினால் மரணித்ததாக கூறி, பலவந்தமாக எரித்தமைக்கு எதிராக மகன் ஒருவர் சிரேஷ்ட சட்டத்தரணி கௌரி சங்கரி தவராசா ஊடாக இம்மனுவை, மேன்முறையீட்டு நீதிமன்றில் தாக்கல் செய்துள்ளார்.

தெஹிவளை, களுபோவில பகுதியை சேர்ந்த எம்.ஆர்.எம். நிபால் என்பவரே இவ்வழக்கைத் தாக்கல் செய்துள்ளார். இம்மனுவில் சுகாதார அமைச்சர் பவித்ராதேவி வன்னி ஆரச்சி, சுகாதார அமைச்சின் செயலாளர் மேஜர் ஜெனரால் சஞ்ஜீவ முனசிங்க, இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரால் சவேந்ர சில்வா, பொலிஸ்மா அதிபர் சி.டி.விக்ரமரத்ன உள்ளிட்டவர்கள் பிரதிவாதிகளாகக் குறிப்பிடப்பட்டுள்ளனர்.

தமது வீட்டில் எவருக்கும் வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்படாத நிலையில் தந்தைக்கு மாத்திரம் கொரோனா இருப்பதாக கூறி, உடலை தகனம் செய்துள்ளதாகவும் மனுதாரர் சுட்டிக்காட்டியுள்ளார்.

குறித்த ரிட் மனு எதிர்வரும் 2021 ஜனவரி 19 ஆம் திகதி, பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.  அன்றைய தினம் விடயங்களை முன்வைக்க பிரதிவாதிகளுக்கு அறிவித்தல் அனுப்பவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.