உலக கட்டுமான தொழில்நுட்பங்களில் நவீனமானது 3 டி கட்டிடக்கலையாகும். இதற்கு முன்னதாக 3 டி அல்லது முப்பரிமாண பிரதியெடுக்கும் முறையில் சிறு பொருட்கள், உடல் உறுப்புகள், கை, கால் எலும்புகள், பாதிக்கப்பட்ட பாகங்கள், எந்திர உதிரி பாகங்கள் இப்படி ஏராளமான வகையில் பொருட்களை தயாரித்து சாதனை செய்யப்பட்டுள்ளது.
அதையே பிரமாண்டமான கட்டமைப்பில் உருவாக்கமுடியுமா? என்ற கேள்விக்கு விடையளிக்கும் வகையில் இந்த 3 டி கட்டிடங்கள் தற்போது உலகை பிரமிப்பில் ஆழ்த்தி வருகின்றன. 3 டி முறையில் கட்டிட அமைப்புகளை ஒரு எந்திரம் உருவாக்குகிறது. அந்த தொழில்நுட்பம் எவ்வாறு சாத்தியமாகிறது? என்பதை சார்ஜாவில் உள்ள பல்கலைக்கழகங்களின் ஆராய்ச்சியாளர்கள் உதவியுடன் வீடு ஒன்று கட்டப்பட்டுள்ளது.
இந்த தொழில்நுட்பத்தில் பிசின் போன்ற ரசாயன கலவைகள் அடங்கிய ‘அட்மிக்ஸர்கள்’ எனப்படும் பொருளால் கலந்த சிமெண்ட் குழைக்கப்படுகிறது. இந்த கலவையில் தகுந்த இடங்களில் ஆக்ஸிஜனை படிப்படியாக செலுத்துவதன் மூலம் அதை திட வடிவத்திற்கு மெல்லமெல்ல மாறும்படி செய்து விட முடியும். இந்த முறையை கையாண்டு நமக்கு தேவைப்படும் விதத்தில் முப்பரிமாண முறையில் தேவையான எந்த ஒரு பிரமாண்டமான அமைப்பையும் உருவாக்கிவிட முடியும்.
ஒரு கம்ப்யூட்டரில் கட்டிட வரைபடம் 3 டி வடிவத்தில் இருக்கும். அதில் கட்டிடப் பணிகளை செய்வதற்கான பிரத்தியேக 3 டி பிரிண்டிங் எந்திரமும் இணைக்கப்பட்டிருக்கும். அந்த எந்திரம் இயங்கும்போது கட்டிடத்தின் 3 டி வரைபடத்துக்கு ஏற்ப கம்பி, சிமெண்டு கலவை ஆகியவற்றை தானாக எடுத்துக்கொண்டு, அந்த எந்திரம் வீட்டை தாமாகவே வடிவமைத்துக் கொள்கிறது.
சிமெண்டு கலவை, இரும்புக் கம்பிகள் போன்றவற்றை கையாளும் அபிஸ் கோர் 3 டி என்ற எந்திரம் 360 டிகிரி கோணத்தில் முழு வட்டமாக இயங்கும் திறன் கொண்டது. இது வீடு கட்டும் இடத்தில் வைக்கப்பட்டு அதன் மூலம் சிமெண்டு கலவை குழாய் மூலம் செலுத்தப்படுகிறது. அதில் உள்ள பெரிய ‘சிரிஞ்ச்’ போன்ற அமைப்பு வேகமாக சுவர்களை உருவாக்க ஆரம்பிக்கிறது.
கட்டுமான அமைப்பானது உபகரணத்தில் உள்ள கம்ப்யூட்டர் வரைபடத்தின்படி வீட்டின் சுவர்கள் அமைக்கப்படுகின்றன. இந்த கட்டிடங்களுக்கு ஆகும் செலவு மிகவும் குறைவானதாகும். தற்போது இதே தொழில்நுட்பத்தில் சார்ஜாவில் வீடு ஒன்று கட்டப்பட்டுள்ளது. சார்ஜாவில் உள்ள பல்கலைக்கழகங்கள் மற்றும் பின்லாந்து, சுவிட்சர்லாந்து நாட்டின் பல்கலைக்கழகங்கள் ஆதரவில் வீடு அமைக்கப்பட்டுள்ளது.
எதிர்காலத்தில் இதுபோன்ற முப்பரிமாண பிரதியெடுத்தல் தொழில்நுட்பத்தில் அமையும் கட்டிடங்கள் அதிகமாக இருக்கும் என அந்த தொழில்நுட்ப பூங்காவின் தலைமை செயல் அதிகாரி ஹுசைன் அல் மஹ்மவுதி தெரிவித்தார். கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் இதே தொழில்நுட்பத்தில் துபாயில் மாநகராட்சி சார்பில் பிரமாண்ட அலுவலக கட்டிடம் கட்டப்பட்டது குறிப்பிடத்தக்கது.