நெல்லை சந்திப்பு சிந்துபூந்துறை காமராஜர் தெருவை சேர்ந்தவர் முத்துசாமி. இவருடைய மனைவி சுந்தரி (வயது 56). இவர்களது வீட்டின் அருகில் முத்துசாமியின் அண்ணன் முத்துக்குட்டி குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். அண்ணன்-தம்பி குடும்பத்துக்கு இடையே சொத்து தகராறு இருந்து வந்தது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு பத்திரகாளியம்மன் கோவில் அருகில் வந்தபோது சுந்தரி கத்தியால் குத்தி படுகொலை செய்யப்பட்டார்.

இதுகுறித்து தகவல் அறிந்த நெல்லை டவுன் போலீஸ் உதவி கமிஷனர் சதீஷ்குமார், சந்திப்பு இன்ஸ்பெக்டர் ரேனியஸ் ஜேசுபாதம் மற்றும் போலீசார் விரைந்து சென்று, சுந்தரி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து சுந்தரியின் மகள் முத்தமிழ்செல்வி கொடுத்த புகாரின் பேரில், நெல்லை சந்திப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து முத்துக்குட்டியின் மகன் மணிகண்ட பிரபுவை (33) கைது செய்தனர். அவரிடம் இருந்து கொலைக்கு பயன்படுத்திய கத்தியை பறிமுதல் செய்தனர்.

கைதான மணிகண்ட பிரபு போலீசாரிடம் பரபரப்பு வாக்குமூலம் அளித்து உள்ளார். அதன் விவரம் வருமாறு:-

நான் சொத்து தகராறு தொடர்பாக சித்தி சுந்தரி மற்றும் அவருடைய மகள்களிடம் தகராறு செய்து வந்தேன். இதுகுறித்து எனது குடும்பத்தை பற்றி உறவினர்களிடம் சுந்தரி அவதூறாக பேசி வந்தார். இதனால் எங்களது குடும்பத்தினருக்கு அவமானம் ஏற்பட்டது. இதனால் ஆத்திரம் அடைந்து அவரை கத்தியால் குத்திக் கொலை செய்தேன்.

இவ்வாறு அவர் வாக்குமூலத்தில் கூறி இருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.

இந்த வழக்கில் மணிகண்ட பிரபுவின் அண்ணன் பாலதிருமுருகனையும் (36) போலீசார் தேடி வருகின்றனர்.