திருவனந்தபுரம்: சபரிமலை ஐயப்பன் கோவிலில் பணியாற்றிய 18 போலீசார் உட்பட 36 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சபரிமலை ஐயப்பன் கோவில் மண்டல பூஜைக்காக திறக்கப்பட்டு வழிபாடுகள் நடத்தப்பட்டு வருகின்றன. சபரிமலை கோவிலில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் சிறப்பு பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவல் துறையினர், தேவஸ்தான ஊழியர்கள், தற்காலிக பணியாளர்கள் மற்றும் ஓட்டல், நிறுவனங்களில் பணியாற்றும் தொழிலாளர்கள் ஆகியோர் 14 நாட்களுக்கு ஒரு முறை கொரோனா பரிசோதனை செய்ய சுகாதாரத்துறை உத்தரவிட்டது. இந்நிலையில் சமீபத்தில் நடத்தப்பட்ட பரிசோதனையில், கோவிலில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த 18 போலீசார், 12 தேவசம்போர்டு ஊழியர்கள் மற்றும் அப்பகுதியில் கடைகளில் பணியாற்றுவோருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
இதனையடுத்து தொற்று உறுதியான அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. எனவே பக்தர்கள் அச்சம்கொள்ள தேவையில்லை என கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. டிசம்பர் 26ம் தேதி நடைபெறவுள்ள மண்டல பூஜைக்காக நவம்பர் 16ம் தேதி சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறக்கப்பட்டது. கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் கொரோனா பரிசோதனைக்கு பிறகே அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். சபரிமலையில் இதுவரை 220க்கும் அதிகமானோருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சபரிமலையில் கொரோனாவின் தாக்கத்தை கட்டுப்படுத்தும் வகையில் சன்னிதான சிறப்பு போலீஸ் அதிகாரிதலைமையில் அவசர ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
கோவிலில் தொடர்ந்து அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு!: 18 காவலர்கள் உட்பட 36 பேருக்கு தொற்று உறுதி..!!
