ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தை அடுத்த ஆசனூர் கிராமத்தை சேர்ந்தவர் வாணிஸ்வரி (வயது 50). இவர் தனது மகள் வினோசவுந்தரி (32), மகன் விஷ்ணுபிரசாத் (29), பேத்தி சிவரஞ்சனா (12), பேரன் அரிகிருஷ்ணா (3) ஆகிய 5 பேருடன் ஆந்திர மாநிலம் காளஹஸ்தி கோவிலுக்கு சென்றார். அங்கு சாமி தரிசனம் செய்து விட்டு நேற்று காலை தர்மபுரி வழியாக காரில் அவர்கள் ஊருக்கு திரும்பி கொண்டு இருந்தனர். இந்த காரை விஷ்ணுபிரசாத் ஓட்டி வந்தார்.

தர்மபுரி கலெக்டர் பங்களா பின்புறம் தாளம்பள்ளம் தேசிய நெடுஞ்சாலை பிரிவில் வந்த போது முன்னால் சென்ற லாரி மீது கார் மோதியது. இதில் கட்டுப்பாட்டை இழந்த கார் தடுப்புச்சுவரில் மோதி எதிரே சேலம்-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் நின்றது. இந்த விபத்தில் இடிபாடுகளில் சிக்கி வாணிஸ்வரி உள்பட 5 பேரும் படுகாயம் அடைந்தனர். அக்கம் பக்கத்தினர் அவர்களை மீட்டு தர்மபுரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்

ஆனால் செல்லும் வழியிலேயே வாணிஸ்வரி பரிதாபமாக உயிரிழந்தார். விஷ்ணுபிரசாத் உள்ளிட்ட 4 பேருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து காரணமாக சேலம்-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. விபத்து குறித்து அதியமான்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கோவிலுக்கு சென்று திரும்பிய போது விபத்தில் பெண் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.