வர்த்தகங்கள் மட்டுமல்லாது பொது மக்களின் நலன்களுக்காக வங்கிகள் மூலம் அரசாங்கம் வழங்கும் நிவாரணங்கள் சமூகத்திற்கு கிடைக்காதது தீர்க்கப்பட வேண்டிய பிரச்சினை எனவும் இலங்கை மத்திய வங்கி மற்றும் அரச வங்கிகளின் அதிகாரிகள் அரசாங்கம் வழங்கும் ஆலோசனைகளை நடைமுறைப்படுத்தவில்லை என்றால், அவர்களை நீக்கி விட்டு, வேலை செய்யக் கூடியவர்களுடன் நாட்டின் தேவைகளை நிறைவேற்ற தயங்க போவதில்லை எனவும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
பொருளாதார வீழ்ச்சியில் இருந்து மீள சம்பிரதாயபூர்வமான சிந்தனை மற்றும் வேலை செய்யும் முறைமைகளுக்கு புறம்பாக தீர்மானங்களை எடுக்க தயங்க போவதில்லை எனவும் ஜனாதிபதி கூறியுள்ளார்.
நாடு வழமைக்கு திரும்பிக் கொண்டிருக்கும் போது எதிர்நோக்கும் பொருளாதார மறுவாழ்வுக்காக அரசாங்கம் முன்னெடுக்கும் வேலைத்திட்டங்களை தெளிவுப்படுத்தவும் அரச நிறுவனங்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை அடையாளம் காண்பது தொடர்பாகவும் ஜனாதிபதி செயலகத்தில் நேற்று நடைபெற்ற வர்த்தக சமூகத்துடனான சந்திப்பில் ஜனாதிபதி இதனை கூறியுள்ளார்.
நிறுவனங்கள் துறையின் பிரச்சினைகள் மற்றும் தடைகளை அடையாளம் கண்டு அவற்றை தீர்க்க முழுமையான ஒத்துழைப்புகளை வழங்க அரசாங்கம் தயாராக இருப்பதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.