கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில் அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்ட வேலைதிட்டங்களுக்கு அமைய தேசிய அடையாள அட்டையை பெற்றுக்கொள்வதற்கான ஒரு நாள் விரைவு சேவை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருந்தது.
தற்போது இலங்கையில் ஊரடங்கு தளர்வு செய்யப்பட்டு இயல்புவாழ்க்கை மீள இயங்க ஆரம்பித்த நிலையில், தேசிய அடையாள அட்டைகளை ஒரே நாளில் விநியோகிக்கும் சேவையும் எதிர்வரும் 22 ஆம் திகதி மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளது.
எதிர்வரும் 22 ஆம் திகதி முதல் நாளாந்தம் மட்டுப்படுத்தப்பட்ட வகையில் சேவை முன்னெடுக்கப்படவுள்ளதாக ஆட்பதிவு திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதற்கிணங்க, பத்தரமுல்லயில் அமைந்துள்ள தலைமைக் காரியாலயத்தில் நாளாந்தம் 250 பேருக்கு தேசிய அடையாள அட்டை விநியோகிக்கப்படவுள்ளது.
காலியில் அமைந்துள்ள தென் மாகாண அலுவலகத்தில் நாளாந்தம் 50 அடையாள அட்டைகள் விநியோகிக்கப்படவுள்ளன.
இதற்கிணங்க, தேசிய அடையாள அட்டையைப் பெற்றுக்கொள்ள எதிர்பார்ப்பவர்கள் கிராம உத்தியோகத்தரால் அத்தாட்சிப்படுத்தப்பட்ட விண்ணப்பப்படிவத்தை பிரதேச செயலகத்தில் அமைந்துள்ள அடையாள அட்டை கிளை அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.
10 அலுவலக நாட்களுக்குள் வருகை தர உசிதமான நாள் மற்றும் நேரத்தை ஒதுக்கி இலக்கமொன்றையும் பெற்றுக்கொள்ள வேண்டும்.
இதன் பின்னர் குறித்த தினத்தில் தலைமை அலுவலகத்திற்கு வருகை தந்து தேசிய அடையாள அட்டையை பெற்றுக்கொள்ள முடியும்.