சுவிட்சர்லாந்தின் துர்காவ் மண்டலத்தில் வனப்பகுதியில் இருந்து மீட்கப்பட்ட சடலம் தொடர்பில் பொலிசார் பெண் ஒருவரை கைது செய்துள்ளனர். சனிக்கிழமை கைது செய்யப்பட்ட 54 வயது பெண்மணியின் குடியிருப்பை மண்டல பொலிசார் வெள்ளிக்கிழமை தீவிர சோதனைக்கு உட்படுத்திய நிலையில், இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மேலும் குறித்த பெண்மணியை நீதிமன்ற காவலில் எடுத்து விசாரிக்கும் பொருட்டு, அனுமதி கோரப்படும் எனவும் தெரிய வந்துள்ளது.
கைதான பெண்மணி தொடர்பில் மேலதிக தகவல்களை வெளியிட விசாரணை அதிகாரிகள் தரப்பு மறுத்துள்ளது.
மட்டுமின்றி வழக்கின் தற்போதை நிலை தொடர்பிலும் மண்டல பொலிசார் கருத்து தெரிவிக்க மறுத்துள்ளதாக கூறப்படுகிறது.
ஒரு வாரத்திற்கு முன்னர் துர்காவ் மண்டலத்தின் Egnach பகுதியில், மரங்கள் அடர்ந்த இடத்தில் 62 வயது பெண்மணியின் சடலம் ஒன்றை பொலிசார் மீட்டுள்ளனர்.
முதற்கட்ட விசாரணையில், அவர் அக்டோபர் இறுதியில் இருந்தே காணாமல் போனவர் என்ற தகவல் வெளியானது.
மேலும், குறித்த பெண்மணி மாயமான தகவலை மண்டல பொலிசார், நவம்பர் மாதமே அறிவிப்பாக வெளியிட்டுள்ளனர்.
இந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்ட பெண்மணியின் நெருங்கிய தோழி ஒருவர், அவர் தொடர்பில் பேசியுள்ளார்.
தமது தோழி மாயமானார் என்ற தகவலே தம்மால் நம்ப முடியவில்லை எனவும், அவ்வாறான ஒரு நடவடிக்கையை ஒருபோதும் அவர் செய்திருக்க வாய்ப்பில்லை எனவும் தெரிவித்துள்ளார்.
மட்டுமின்றி, அக்டோபர் மாதம் அவரை தொலைபேசியில் தொடர்பு கொண்ட போது, பணி ஓய்வுக்கு பின்னர் என்ன செய்ய வேண்டும் என்பது தொடர்பில் விவாதித்ததாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும், பணப்பை, மொபைல் உள்ளிட்ட ஏதுமின்றி அவர் குடியிருப்பில் இருந்து வெளியே செல்வது, அவருக்கு உகந்ததாக தாம் கருதவில்லை என்றார்.
தமது தோழிக்கு இந்த நிலை ஏற்பட்டுள்ளது, தம்மால் தாங்க முடியவில்லை என கூறும் அவர், இதுபோன்ற நிலை அவருக்கு ஏற்பட்டிருக்க கூடாது என்றார்.
இந்த வழக்கின் உண்மையான பின்னணி மிக விரைவில் வெளியாக வேண்டும் என்றே தாம் விரும்புவதாக தெரிவித்துள்ளார்.