இந்தியாவில் விமான படை, கடற்படை, ராணுவம் என முப்படைகளிலும் பணியாற்றிய பெருமை ஒருவருக்கு உண்டென்றால், அவர்தான் கர்னல் பிரிதிபால் சிங் கில். இவர் 30 ஆண்டு காலம் நாட்டுக்கு சேவை ஆற்றி உள்ளார்.


இவர் லாகூர் அரசு கல்லூரியில் பட்டம் பெற்று 1942-ல் ஆங்கிலேயர் ஆட்சியில் இந்திய விமான படையில் சேர்ந்தார். ஹோவர்ட் விமானத்தில் பறக்க பயிற்சி பெற்றபோது, அவரது தந்தை மேஜர் ஹர்பால் சிங் கில் அவரை விமான படையில் இருந்து விலக வைத்தார்.

பின்னர் அவர் கடற்படையில் சேர்ந்தார். இரண்டாம் உலகப்போரின்போது, ஐ.என்.எஸ். டீர் போர் கப்பலில் பணியாற்றினார்.

அதன்பின்னர் அவர் கடற்படையில் இருந்து விலகினார். இந்திய விடுதலைக்கு பின்னர் அவர் ராணுவத்தில் சேர்ந்து பணியாற்றினார். 1970-ல் அவர் ஓய்வு பெற்றார்.

தற்போது சண்டிகாரில் வசிக்கும் அவர் நேற்று முன்தினம் சதம் அடித்தார். ஆமாம், தனது 100-வது பிறந்த நாளை கொண்டாடினார்.

சமூக ஊடகங்களில் அவருக்கு வாழ்த்துகள் குவிந்து விட்டன. பஞ்சாப் மாநில முதல்-மந்திரி அமரிந்தர்சிங்கும் அவருக்கு டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்தார். அவர் தனது வாழ்த்து செய்தியில், “இன்று 100 வயதை எட்டிய கர்னல் பிரிதிபால் சிங் கில்லுக்கு வாழ்த்துகள். முப்படைகளிலும் பணியாற்றிய தனித்துவத்தை நீங்கள் கொண்டிருக்கிறீர்கள். இன்னும் பல காலம் நீங்கள் நல்ல ஆரோக்கியத்துடன் இருக்க வேண்டும் என்று விரும்புகிறேன். நீங்கள் எப்போதும் எங்கள் அனைவருக்கும் உத்வேகம் அளிக்க வேண்டும்” என கூறி உள்ளார்.

சதம் அடித்துள்ள பிரிதிபால் சிங் கில் மனைவி பிரேமிந்தர் கவுருக்கு 93 வயதாகிறது. இந்த மாதத்தின் பிற்பகுதியில் இந்த தம்பதியர் தங்களது 70-வது திருமண நாளை கொண்டாட இருப்பது சிறப்பு.