ராசிபுரம் அருகே உள்ள அணைப்பாளையம் கிராமத்தை சேர்ந்த பள்ளி மாணவிகள் 2 பேர் கடந்த மாதம் ஒரு கும்பலால் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டனர். இதுதொடர்பாக ராசிபுரம் அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, 75 வயது முதியவர் உள்பட 11 பேரை கைது செய்தனர்.

 


இந்த வழக்கில் சேலம் சிறையில் அடைக்கப்பட்டு உள்ள அணைப்பாளையத்தை சேர்ந்த சண்முகம் (வயது 40), சிவா என்கிற சங்கர் (26) ஆகிய இருவரை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்தி கணேசன் மாவட்ட கலெக்டருக்கு பரிந்துரை செய்தார்.
 

அவரது பரிந்துரையை ஏற்று கலெக்டர் மெகராஜ் இருவரையும் குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்க உத்தரவிட்டு உள்ளார். இதையடுத்து சண்முகம் மற்றும் சிவா என்கிற சங்கர் ஆகிய இருவர் மீதும் குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்து உள்ளது.

 

இதற்கான நகலை ராசிபுரம் போலீசார் சிறையில் அடைக்கப்பட்டு உள்ள இருவரிடமும் நேற்று ஒப்படைத்தனர். இந்த வழக்கில் ஏற்கனவே 4 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு உள்ளனர். எனவே இவ்வழக்கில் இதுவரை குண்டர் சட்டம் பாய்ந்து உள்ள நபர்களின் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்து உள்ளது.