கேரள மாநிலம் எர்ணாகுளம் பகுதியைச் சேர்ந்தவர் யூசுப், (வயது 62).
யூசுப் வீடு அருகே சுற்றித்திரிந்த தெரு நாய் ஒன்று அடிக்கடி குரைத்து கொண்டே இருந்தது. இது யூசுப் குடும்பத்தினருக்கு எரிச்சலை ஏற்படுத்தியது.
எனவே அவர்கள் அந்த நாயை அந்த பகுதியில் இருந்து துரத்தி விட முயன்றனர். ஆனால் நாய் அங்கிருந்து செல்ல மறுத்தது.
இதையடுத்து யூசுப் அந்த நாயை வேறு இடத்தில் கொண்டு விட முடிவு செய்தார். இதற்காக நேற்று காலை 11 மணிக்கு அந்த நாயின் கழுத்தில் லாவகமாக கயிற்றை கட்டினார்.
பின்னர் கயிற்றை தனக்கு சொந்தமான காரின் பின் பகுதியில் கட்டிக்கொண்டார். தொடர்ந்து அந்த காரை வேகமாக ஓட்டிச்சென்றார்.
யூசுப் காரில் நாயை கட்டி இழுத்துச் செல்வதை அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் சென்ற அகில் என்ற வாலிபர் பார்த்தார். முதலில் அவர் காரை நாய் துரத்திச் செல்வதாக நினைத்தார். அருகில் சென்று பார்த்தபோதுதான் நாயை காரில் கட்டி இழுத்துச் செல்வதை கண்டார்.
பதறிப்போன அவர், காரை வழி மறித்து நிறுத்தினார். பின்னர் யூசுப்பிடம் ஏன் இப்படி செய்கிறீர்கள் என்று கேட்டார். இதை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து செல்போனில் பதிவு செய்தனர். அதனை சமூக வலைத்தளத்திலும் பதிவிட்டனர்.
இதையடுத்து யூசுப், காரில் கட்டிய நாயை அவிழ்த்து விட்டு விட்டு சென்று விட்டார். படுகாயங்களுடன் உயிருக்கு போராடிய நாய் குறித்து அக்கம் பக்கத்தினர் விலங்குகள் நலவாரிய உறுப்பினர்கள் மற்றும் தொண்டு நிறுவனத்திற்கு தகவல் கொடுத்தனர். அவர்கள் நாயை மீட்டு கால்நடை ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
இதற்கிடையே சமூக வலைத்தளத்தில் பரவிய காட்சியை பார்த்த செங்கமநாடு போலீசார் தாமாக முன் வந்து யூசுப் மீது வழக்குப்பதிவு செய்தனர்.
அவர் மீது இந்திய தண்டனைச்சட்டம் 428 (விலங்குகளை வதை செய்தல்), 429 (விலங்குகளை கொல்ல முயல்தல்), பிரிவு 11(1) ஆகிய 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.