அழகு, நறுமணம் தரும் பல பதிவுரிமை செய்யப்பட்ட மருந்துகள், வாசனைப் பொருட்கள், சோப்புகள், தைலங்கள் ஆகியவை தயாரிக்கப்படுவதில் கஸ்தூரி மஞ்சள் முக்கிய இடம் பெறுகின்றது.
தோல் நோய்கள் தீர கஸ்தூரி மஞ்சள் தூளை வெந்நீரில் குழைத்து மேல் பூச்சாகப் பூசிவர வேண்டும் அல்லது கஸ்தூரி மஞ்சள், துளசி ஆகியவற்றைச் சம அளவாகச் சேர்த்து, அரைத்து, உடலில் தேய்த்து, சிறிது நேரம் கழித்து, வெந்நீரில் குளிக்க வேண்டும்.
கஸ்தூரி மஞ்சள் சாதாரண மஞ்சளை விடச் சற்று மணம் அதிகமுள்ளது. தோல் நோய்களைப் போக்கும் தன்மையைப் பெற்றது. இளம் பெண்களில் சிலருக்கு முகத்தில் ஆண்களைப் போல மேலுதட்டின் மீது முடி வளர்வதுண்டு. இதைப் போக்க கஸ்தூரி மஞ்சளைப் பொடித்து அல்லது குழைத்து முகத்தில் பூசிக் கழுவி வந்தால் முடி வளர்வது தடைப்படும். முகத்தில் பொலிவு ஏற்படும்.
பெண்கள் இந்த மஞ்சள் கிழங்கைப் பொடித்து, உடல் முழுவதும் பூசி, சற்று நேரம் கழித்து குளித்தால் தோல் நோய்கள் நீங்கும். கஸ்தூரி மஞ்சளை வெங்காயச் சாற்றில் குழைத்துக் கட்டிகள் மீது பூசினால் கட்டிகள் உடையும். சாதாரண மஞ்சளுக்குப் பதிலாக, பெண்கள் கஸ்தூரி மஞ்சளை இடித்துத் தூளாக்கியோ கல்லில் அரைத்தோ முகத்திற்குப் பூசி வந்தால், முகத்தில் பொலிவு ஏற்படும். முகப் பருக்கள், தேமல்கள் ஆகியவை வாராமல் தடுக்கும்.
இந்த மஞ்சளையும். பூலாங்கிழங்கையும் சம அளவு எடுத்து அரைத்து முகத்தில் பூசி வந்தால் முகம் பளபளப்பாக இருக்கும். இதனை தினமும் செய்து வரவேண்டும். மஞ்சள், பயித்தமாவு, தயிரை ஒன்றாகக் கலந்து முகத்தில் பூசி 30 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். முகம் பளபளக்க இது ஒரு சிரந்த பேஸ் பேக் ஆகும்.