தேர்தல் ஆணைக்குழு உறுப்பினர் ரத்னஜீவன் ஹுலின் சர்ச்சைகள் தொடர்பான ஆவணங்கள் என்னிடம் இருக்கிறது. உரியநேரத்தில் அவை வெளியில் வரலாமென கடற்றொழில் நீரியல் வழங்கல் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.
வவுனியாவில் இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
குறித்த ஊடக சந்திப்பில் அவர் மேலும் கூறியுள்ளதாவது, “நாடாளுமன்றத்தை உடனடியாக கூட்டவேண்டிய தேவை நாட்டுக்கும் மக்களுக்கும் இருக்கின்றது.
கொரனோ வைரஸ் தாக்கத்தினால் ஏற்பட்டுள்ள பொருளாதாரம், வாழ்வாதாரப் பாதிப்புகளை நிவர்த்தி செய்வதற்கு எமக்கு நாடாளுமன்றத்தை கூட்டவேண்டிய தேவை இருக்கின்றது.
தற்போது நாட்டில் சமூக பரவல் இல்லாமல் கொரனோ வைரஸ் தாக்கம் கட்டுப்படுத்தப்பட்டிருக்கின்றது. கூட்டமைப்பினுடைய நல்லாட்சி அரசாங்கம் இருந்திருந்தால் பலர் தற்போது இறப்பதற்கான வாய்ப்புக்கள் இருந்திருக்கும்.
இதேவேளை ரட்னஜீவன், இன்று நேற்று அல்ல நீண்டகாலமாக சர்ச்சைக்குரிய பக்கசார்பான குழப்பத்தை ஏற்படுத்தகூடிய கருத்துக்களைதான் தெரிவித்து வருபவர்.
அது ஏற்றுக்கொள்ளகூடியதல்ல. அவர் முன்னர் பணியாற்றிய இடங்களிலும் சர்ச்சைகள் ஏற்பட்டிருந்தது. அவருடைய வரலாற்று ரீதியான சர்சைகள் தொடர்பாக என்னிடம் ஆவணங்கள் இருக்கின்றது. உரியநேரத்தில் அவை வெளியில் வரலாம். அவர் எவ்வாறு தேர்தல் ஆணைக்குழு உறுப்பினரானார் என்பது தெரியவில்லை” என குறிப்பிட்டுள்ளார்.