விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் தெற்கு மலையடிபட்டியைச் சேர்ந்தவர் ராமர் (வயது52), எலக்ட்ரீசியன். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.
இவரது பக்கத்து வீட்டில் வசிப்பவர் மாடசாமி. இவரது மனைவி மாரியம்மாள் (45). இவர்களுக்கு மாடசாமி மதன் (25) உள்பட 4 மகன்கள் உள்ளனர்.
மாடசாமி பெங்களூருவில் வேலை பார்த்து வருகிறார். இதனால் மாரியம்மாள் மகன்களுடன் இங்கு வசித்து வருகிறார்.
இந்த நிலையில் அவருக்கு ராமருடன் பழக்கம் ஏற்பட்டது. இது நாளடைவில் கள்ளத்தொடர்பாக மாறியது. இருவரும் அடிக்கடி தனிமையில் பேசி வந்தார். இது தெரியவந்ததும் மாரியம்மாளின் மகன் மாடசாமி மதன் மற்றும் உறவினர்கள் கண்டித்தனர்.
இருப்பினும் மாரியம்மாளுடன் உள்ள தொடர்பை ராமர் துண்டிக்கவில்லை. பலமுறை கண்டித்தும் அவர் கேட்காததால் மாடசாமி மதன் ஆத்திரம் அடைந்தார்.
இந்த நிலையில் நேற்று இரவு ராமர் தனது வீட்டின் வாசலில் உட்கார்ந்திருந்தார். அப்போது அங்கு மாடசாமி மதன் வந்தார். ராமரை பார்த்ததும் அவருக்கு ஆத்திரம் ஏற்பட்டது.
பலமுறை கண்டித்தும் ஏன் எனது தாயாருடன் பழகுகிறாய் என கேட்டார். இதனால் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது.
இதில் ஆத்திரம் அடைந்த மாடசாமி மதன் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து ராமரை சரமாரியாக குத்தினார். அவரது அலறல் சத்தம் கேட்டதும் வீட்டிற்குள் இருந்தவர்கள் வெளியே ஓடி வந்தனர். அங்கு ராமர் ரத்த வெள்ளத்தில் கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.
அவரது உடலில் 15 இடங்களில் கத்திக்குத்து விழுந்திருந்தது. அவரை உடனடியாக அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்ல முயன்றனர். ஆனால் அதற்குள் ராமர் பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து ராஜபாளையம் தெற்கு போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் கணேஷ் தாஸ் மற்றும் போலீசார் சம்பவ இடம் விரைந்து வந்தனர்.
அப்போது சாலையில் பிரமை பிடித்ததுபோல் கத்தியுடன் மாடசாமி மதன் நின்று கொண்டிருந்தார். அவரை போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து ராமர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
கள்ளக்காதல் விவகாரத்தில் எலக்ட்ரீசியன் கொலை செய்யப்பட்ட விவகாரம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.