சென்னை மதுரவாயில் அடுத்த ஆலப்பாக்கத்தில் இயங்கி வரும் பிரைட் ஆட்டோ காம்பனட்ஸ் நிறுவனத்தில் பணிபுரிந்து வருபவர் பிரபாகரன். இவருடைய சொந்த ஊர் நாகப்பட்டினம். இவர் பணிபுரியும் நிறுவனத்திற்கு மேலே உள்ள அறையில் தங்கி வருகிறார். இந்நிலையில் நேற்று இரவு பணி முடித்துவிட்டு உறங்கச் சென்ற பிரபாகரனை, இன்று காலை அவருடன் பணிபுரியும் தெய்வமணி என்பவர் பணிக்குச் செல்ல எழுப்ப சென்றார். அப்போது அவர் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
பின்னர் இதுகுறித்து மதுரவாயல் காவல்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. தகவல் அறிந்த போலீசார் உடனே விரைந்து வந்து பிரேதத்தை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது பிரபாகரன் தங்கி இருந்த அறையில் ஓர் கடிதம் சிக்கியது.
அதில் ஒரு பெண்ணை காதலித்து வந்ததாகவும் அந்தப் பெண்ணிற்கு வேறு ஒருவருடன் திருமணம் நடந்துவிட்டதாகவும் அந்தப் பெண்ணை மறக்க முடியாத காரணத்தால் தான் தூக்கிட்டு தற்கொலை செய்து கொள்வதாகவும் எழுதியிருந்தார்.
தற்கொலை செய்துக்கொண்டவர் எழுதிய கடிதம்
மேலும் என்னுடைய சாவிற்கு யாரும் காரணம் இல்லை எனவும் அம்மா எத்தனை ஜென்மம் எடுத்தாலும் நீயே எனக்கு தாயாக வேண்டும். உங்கள் இருவரையும் கடைசி காலம் வரை இருந்து கவனித்துக்கொள்ள முடியாத பாவி ஆகிவிட்டேன். அம்மா என்னை மன்னித்து விடுங்கள் என உருக்கமான கடிதம் எழுதியுள்ளார்.