பொதுவாகவே காலநிலை மாறும் போது குழந்தைகளுக்கும் சரி, பெரியவர்ளுக்கும் சரி சளியும் இருமலும் வந்துவிடுகின்றது.
சளி இருமல் வந்துவிட்டால் கூடவே தொண்டைவலியும் வந்துவிடும் சில வேளைகளில் உடலில் வெப்பம் அதிகரித்து காய்ச்சலாகவும் மாறிவிடும்.
பருவநிலை மாறும்போது இவை வருவதற்கான வாய்ப்புகள் அதிகம். சளி, இருமல் வந்துவிட்டால், அதிலிருந்து இயற்கையான வழிமுறைகளைப் பயன்படுத்தியே மீண்டுவிடலாம்.
அப்படி சளி தொல்லைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் இயற்கை மூலிகையான தூதுவளையில் எவ்வாறு சிறுவர்களும் விரும்பி உண்ணும் வகையில் ரசம் செய்வது என இந்த பதிவில் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
புளி - நெல்லிக்காய் அளவு
தக்காளி - 2
உப்பு - சுவைக்கேற்ப
தண்ணீர் - தேவையான அளவு
மஞ்சள் தூள் - 1/4 தே.கரண்டி
கொத்தமல்லி - சிறிதளவு
பொடி செய்வதற்கு தேவையானவை
சீரகம் - 1 தே.கரண்டி
மிளகு - 1 தே.கரண்டி
வரமிளகாய் - 1
மல்லி - 1 மேசைக்கரண்டி
துவரம் பருப்பு - 1 மேசைக்கரண்டி
பூண்டு - 7-8 பல்
தூதுவளை இலை - 1 கைப்பிடியளவு
நெய் - 1 மேசைக்கரண்டி
கடுகு - 1 தே.கரண்டி
வரமிளகாய் - 2
பெருங்காயத் தூள் - 1 சிட்டிகையளவு
செய்முறை
முதலில் ஒரு பாத்திரத்தில் நீரை எடுத்து, அதில் புளியை சேர்த்து ஊற வைத்துக் சாறு தயார் செய்து எடுத்துக்கொள்ள வேண்டும்
பின்னர் புளி கரைசலுடன் தக்காளியையும் அரைத்து சேர்த்துக்கொள்ள வேண்டும்.
அதனையத்து சீரகம், மிளகு, வரமிளகாய், மல்லி, துவரம் பருப்பு, பூண்டு ஆகியவற்றை ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து பொடித்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் அதனுடன் தூதுவளை இலையை சேர்த்து நீர் சேர்க்காமல் நன்றாக அரைத்து, புளிச்சாற்றுடன் அரைத்த கலவையையும் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
பின்ர் அதனுடன் மஞ்சள் தூள், சுவைக்கேற்ப உப்பு சேர்த்து நன்றாக கலந்துவிட வேண்டும்.
பின்னர் ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் நெய்யை ஊற்றி சூடானதும், கடுகு, வரமிளகாய், பெருங்காயத் தூள் சேர்த்து தாளித்துக்கொள்ள வேண்டும்.
அதனையடுத்து கரைத்து வைத்துள்ளதை ஊற்றி, நுரைக்கட்ட ஆரம்பிக்கும் போது அடுப்பை அணைத்துவிட்டு கொத்தமல்லியை தூவி இறக்கினால் அவ்வளவு தான் அருமையான சுவையில் தூதுவளை ரசம் தயார்.