கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை முன்னர் தீர்மானிக்கப்பட்ட தினத்தில் நடத்துவது பொருத்தமானது அல்ல என்றும் பரீட்சைக்கான புதிய திகதி பரீட்சைக்கு 06 வாரங்களுக்கு முன் அறிவிக்கப்படும் என்றும் கல்வி அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் இன்று (01) கல்வி அமைச்சு உட்பட நான்கு ராஜாங்க அமைச்சர்களுக்கான குழுநிலை விவாதத்தில் உரையாற்றிய கல்வி அமைச்சர் , டிசம்பர் மாதம் முதல் வாரமளவில் , கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கான கல்வி நடவடிக்கைகளுக்காக பாடசாலைகள் அனைத்தையும் ஆரம்பிக்க முடியாது என்பதினால் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக கூறினார்.

தற்சமயம் பாடசாலைகளுக்கான மாணவர்களின் வருகை 50 சதவீதமாக காணப்படுகிறது ஆபத்தான பிரதேசங்களாக அடையாளம் காணப்பட்டுள்ள பகுதிகளின் பாடசாலைகள் இதுவரை திறக்கப்படவில்லை ஏனைய பிரதேசங்களில் உள்ள பாடசாலைகளில் பாடசாலைகளை திறப்பதற்கான அதிகாரம் பாடசாலை அதிபர்களுக்கும் பாடசாலைகளுக்கும் வழங்கப்பட்டிருக்கிறது இவ்வாறான நிலையில் எதிர்வரும் ஜனவரி மாதத்தில் சாதாரணதரப் பரீட்சை நடத்துவது மாணவர்களுக்கு இழைக்கப்படும் அநீதியாகும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

விஞ்ஞானம் மற்றும் ஆங்கில பாட பாடங்களுக்கு பாரிய ஆசிரியர் பற்றாக்குறை நிலவுகிறது இதற்காக டிப்ளோமாதரிகளுக்கு பிரதேச செயலாளர் பிரிவுகளின் அடிப்படையில் நியமனங்களை வழங்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார்.

நாட்டில் நிலவும் சுகாதார நிலைமைகள் தொடர்பில் இரண்டு வாரத்திற்கு ஒரு முறை மதிப்பீடு செய்து சாதாரண தரப் பரீட்சையை நடத்துவது தொடர்பாக தீர்மானிக்கப்படும் என்றும் கல்வி அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் மேலும் தெரிவித்துள்ளார்.