வங்க கடலில் உருவாகி உள்ள நிவர் புயல் காரணமாக தமிழகத்தில் பல்வேறு ரெயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இந்த நிலையில் ரத்து செய்யப்பட்டுள்ள ரெயில்களுக்கான டிக்கெட் கட்டணத்தை திரும்பபெற 6 மாத காலம் அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாகவும், எனவே பயணிகள் யாரும் டிக்கெட் கட்டணத்தை திரும்பபெற ரெயில் நிலையம் வரவேண்டாம் என தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.

இது குறித்து தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

இந்த ரத்து செய்யப்பட்ட ரெயில்களுக்கான டிக்கெட்டுகளுக்கான கட்டணம் முழுவதுமாக திருப்பி அளிக்கப்படும். டிக்கெட் கட்டணத்தை திரும்பப்பெற 6 மாத கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இணையதள முன்பதிவு டிக்கெட் தானாகவே ரத்து செய்யப்பட்டு வங்கி கணக்கில் திருப்பி செலுத்தப்படும். முன்பதிவு மையங்களில் பதிவு செய்யப்பட்ட டிக்கெட்டுகள் ரத்து செய்வதற்கு 6 மாத கால அவகாசம் உள்ளது. எனவே பயணிகள் யாரும் அவசரமாக டிக்கெட்டை ரத்து செய்ய ரெயில்வே முன்பதிவு டிக்கெட் கவுண்ட்டர்களுக்கு வரவேண்டாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.