இந்தியாவில் கொரோனா தொற்றால் தினந்தோறும் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை 50 ஆயிரத்திற்கு கீழ் குறைந்தாலும், தற்போது சில மாநிலங்களில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனால் சில மாநிலங்களில் மீண்டும் ஊரடங்கு அமல்படுத்த வாய்ப்பு இருப்பதாக செய்திகள் வெளியாகி வருகின்றன.

அந்த வகையில் டிசம்பர் 1-ந்தேதியில் இருந்து கொரோனா தடுப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக பஞ்சாப் மாநிலத்தின் அனைத்து நகரங்கள் மற்றும் டவுன்களில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று பஞ்சாப் மாநில முதல்வர் அமரிந்தர் சிங் தெரிவித்துள்ளார்.

இரவு 10 மணியில் இருந்து காலை 5 மணி ஊரடங்கு நேரம் என்றும் ஓட்டல்கள், ரெஸ்டாரன்ட், திருமண மண்டபங்கள் இரவு 9.30 மணிக்குள் மூடவும் உத்தரவிட்டுள்ளார். டிசம்பர் 15-ந்தேதிக்குப்பின் மறுஆய்வு செய்யப்படும் எனத் தெரிவித்துள்ளார்.

கொரோனா தடுப்பு நடவடிக்கையை மீறுவோருக்கு 1000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட இருக்கிறது.