கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த அத்திப்பாடி கிராமத்தைச் சேர்ந்தவர் 21 வயது உதயநிலா. இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த மாதேஷ் என்பவருக்கும் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. உதயநிலாவிற்கு திருமண சீராக 50 சவரன் நகை, வரதட்சணையுடன் பொருட்களும் கொடுக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே உதயநிலா மாதேஷ் தம்பதிக்கு ஒன்றரை வயதில் ஒரு ஆண் குழந்தை பிறந்தது.
இருவருக்கும் திருமணம் ஆகி இரண்டு ஆண்டுகள் ஆனாலும் மாதேஷின் தாயார் சரசு உதயநிலா வீட்டில் பணம் கேட்டு தொந்தரவு செய்துள்ளார். உதயநிலாவின் தம்பி பெயரில் நெடுஞ்சாலையோரம் அதிக விலைக்கு போகும் ஐந்து ஏக்கர் நிலத்தை மாதேஷ் பெயருக்கு வரதட்சணையாக மாற்றி தர சொல் என்று மிரட்டியுள்ளார்.
உதயநிலாவின் மாமியார் சரசுடன் சேர்ந்து கணவர் மாதேஷூம் கொடுமைப்படுத்தியதால் அவர் மன உளைச்சலில் இருந்துள்ளார். தீபாவளியை உன் தாய்வீட்டில் போய் கொண்டாடு. வரும்போது நிலத்துடன் வா என்று உதயநிலாவை கட்டாயமாக அவர் தாய் வீட்டில் விட்டு வந்துள்ளார் கணவர் மாதேஷ்.
தீபாவளி முடிந்தும் தாய்வீட்டில் உள்ள உதயநிலாவை கணவர் பார்க்க கூட வரவில்லை. இதனால் சோகத்தில் இருந்த உதயநிலா தற்கொலை முடிவை எடுத்துள்ளார். கடந்த திங்கள் மாலை வீட்டில் அறையில் உதயநிலா தூக்கிட்டு சடலமாக தொங்கியுள்ளார்.
சம்பவம் தொடர்பாக ஊத்தங்கரை போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. சடலத்தை மீட்டவர்கள் எந்த விசாரணையையும் தொடங்கவில்லை என்று குற்றம் சாட்டி 500 க்கும் மேற்பட்டோர் காவல் நிலையம் முன் குவிந்தனர். மேலும் ஊத்தங்கரை நான்குமுனை சந்திப்பில் பொதுமக்கள் சாலைமறியலில் ஈடுப்பட்டு உதயநிலாவின் கணவர் மாதேஷ், மாமியார் சரசு மீது நடவடிக்கை எடுக்க வழியுறுத்தினர். பிறகு நடவடிக்கை எடுப்பதாக போலீசார் வாக்குறுதி கொடுத்ததையடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர். இதனால் சுமார் அரை மணி நேரத்துக்கு மேல் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
வரதட்சணை கொடுமையால் தாய் உயிரிழந்த நிலையில் அவரின் ஒன்றரை வயது குழந்தை தாயில்லாமல் தவிக்கும் சோகம் பார்ப்போரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.