ஜம்மு காஷ்மீரில் பதுங்கியிருந்து நாசவேலைகளில் ஈடுபடும் பயங்கரவாதிகளை ஒழிக்க ராணுவம் தீவிர நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. ராணுவத்தின் தேடுதல் வேட்டையில் ஏராளமான பயங்கரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர். எனினும் பயங்கரவாதிகளின் நடமாட்டம் அதிகரித்தவண்ணம் உள்ளது. பாதுகாப்பு படையினரை குறிவைத்து அவ்வப்போது தாக்குதல் நடத்துகின்றனர். இதனால் முக்கிய பகுதிகளில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், ஜம்மு மாவட்டம் நக்ரோட்டா நகரில் உள்ள பான் சுங்கச்சாவடி அருகே இன்று அதிகாலையில் பயங்கரவாதிகளுக்கும் பாதுகாப்பு படையினருக்கும் இடையே கடும் துப்பாக்கி சண்டை ஏற்பட்டது. ஜம்மு-ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலை மூடப்பட்டது. அப்பகுதிக்கு ஏராளமான ராணுவ வீரர்கள் விரைந்தனர். 

பயங்கரவாதிகள் இருக்கும் பகுதியை பாதுகாப்பு படையினர் சுற்றி வளைத்து தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர். இதில் ஏற்பட்ட சேத விவரம் குறித்த தகவல் வெளியாகவில்லை. மோதல் காரணமாக அப்பகுதியில் பதற்றம் நீடிக்கிறது.