பிரதமர் நரேந்திர மோடி, பாராளுமன்றத் தேர்தலில் வாரணாசி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றிருந்தார். அவரது வெற்றியை எதிர்த்து எல்லைப் பாதுகாப்பு படை முன்னாள் வீரர் தேஜ் பகதூர் அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். 

வாரணாசி தொகுதியில் சமாஜ்வாடி கட்சி சார்பில் போட்டியிட்ட தனது வேட்பு மனுவை தேர்தல் ஆணையம் நிராகரித்ததால் மோடி எளிதாக வெற்றி பெற்றுவிட்டார் என்று தேஜ் பகதூர் தனது மனுவில் குறிப்பிட்டிருந்தார். மனுவை விசாரித்த நீதிமன்றம், 2019ம் ஆண்டு டிசம்பர் 19ம் தேதி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

இதனை அடுத்து தேஜ் பகதூர் உச்ச நீதிமன்றத்தை நாடினார். உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே தலைமையிலான அமர்வில் இவ்வழக்கின் விசாரணை நடைபெற்று வந்தது. 

இன்றைய விசாரணையின்போது, வழக்கை ஒத்திவைக்கும்படி மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் தொடர்ந்து கேட்டுக்கொண்டார். ஆனால் அதனை நிராகரித்த நீதிபதிகள், தொடர்ந்து விசாரணையை நடத்தி முடித்து, தீர்ப்பை ஒத்திவைத்தனர்.

பாதுகாப்பு படை வீரர்களுக்கு வழங்கப்படும் உணவு மிக மோசமாக இருப்பதாக கூறி வீடியோ வெளியிட்டதால் எல்லை பாதுகாப்பு படையில் இருந்து தேஜ் பகதூர் நீக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.