கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக இந்த ஆண்டு பாடசாலை செயற்பாடுகள் பாதிக்கப்பட்ட நிலையில், 2021இல் விடுமுறைகள் குறைக்கப்பட்ட பாடசாலை நாட்காட்டி கல்வியமைச்சினால் வெளியிடப்பட்டுள்ளது.

நாட்டிலுள்ள தமிழ் மற்றும் சிங்கள பாடசாலைகள் 2021 ஆம் ஆண்டு முதலாம் தவணை கல்வி நடவடிக்கைகளுக்காக முதலாம் கட்டமாக ஜனவரி 4 ஆம் திகதி ஆரம்பிக்கப்படுமென கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

கல்வி அமைச்சின் 33/2020 சுற்றறிக்கையின படியே இந்த தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன.

அதன்படி முதலாம் தவணையின் முதல் கட்டம் ஜனவரி 4ஆம் திகதி முதல் ஜனவரி 15ஆம் திகதி வரை (சனி, ஞாயிறு உட்பட) இடம்பெறவுள்ளது.

அத்தோடு ஜனவரி 16 – 31 ஆம் திகதிகள் வரை க.பொ.த. சாதாரணதரப் பரீட்சைகளுக்கான விடுமுறைகள் வழங்கப்படவுள்ளன.

முதலாம் தவணையின் இரண்டாம் கட்டம் பெப்ரவரி முதலாம் திகதி முதல் ஏப்ரல் 9ஆம் திகதி வரை (சனி, ஞாயிறு உட்பட) இடம்பெறவுள்ளது.

இரண்டாம் தவணை கல்வி நடவடிக்கைகள் ஏப்ரல் 19ஆம் திகதி முதல் ஜூலை 30ஆம் திகதி வரையும் (சனி, ஞாயிறு உட்பட) மூன்றாம் தவணை ஓகஸ்ட் 30 முதல் டிசம்பர் 3 ஆம் திகதி வரையும் இடப்பெறவுள்ளன.

இதேவேளை முஸ்லிம் பாடசாலைகளின் 2021 ஆம் ஆண்டு கல்வி நடவடிக்கைகளில் முதலாம் தவணையின் முதல் கட்டம் ஜனவரி 4 ஆம் திகதி முதல் ஜனவரி 15 ஆம் திகதி வரை (சனி, ஞாயிறு உட்பட) இடம்பெறவுள்ளதோடு ஜனவரி 16 – 31 ஆம் திகதிகள் வரை க.பொ.த. சாதாரணதரப் பரீட்சைகளுக்கான விடுமுறைகள் வழங்கப்படவுள்ளன.

முதலாம் தவணையின் இரண்டாம் கட்டம் பெப்ரவரி முதலாம் திகதி முதல் ஏப்ரல் 9 ஆம் திகதி வரை (சனி, ஞாயிறு உட்பட) இடம்பெறவுள்ளது.

இரண்டாம் தவணையானது மே 17ஆம் திகதி திங்கட்கிழமை முதல் ஓகஸ்ட் 25 புதன் கிழமை வரை ( (சனி, ஞாயிறு உட்பட) ) இடம்பெறும். ஓகஸ்ட் 26 மற்றும் 27 ஆம் திகதிகள் விடுமுறை தினங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.

மூன்றாம் தவணையானது ஓகஸ்ட் 30 முதல் டிசம்பர் 3ஆம் திகதி வரையும் இடம்பெறவுள்ளதாக கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள நாட்காட்டியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.