நாம் ஒவ்வொருவரும் வெவ்வேறு இரத்த வகைகளைக் கொண்டுள்ளோம். பொதுவாக A, B, AB மற்றும் O என நான்கு முக்கிய இரத்த வகைகள் உள்ளன. இவை ஒவ்வொன்றும் உடல்நலத்துடன் தொடர்புடைய சில தனித்துவமான அம்சங்களைக் கொண்டிருக்கலாம். அந்த வகையில், குறிப்பிட்ட இரத்த வகையைக் கொண்டவர்களுக்கு தன்னுடல் தாக்கு கல்லீரல் நோய்கள் ஏற்படும் அபாயம் அதிகமாக இருக்கலாம் என புதிய ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.
A இரத்த வகையினருக்கு அதிக ஆபத்தா?
Frontiers இதழில் வெளியான ஆய்வின்படி, A இரத்த வகையைக் கொண்டவர்களுக்கு தன்னுடல் தாக்கு கல்லீரல் நோய்கள் (Autoimmune Liver Diseases - AILD) ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகமாக இருக்கலாம் எனக் கண்டறியப்பட்டுள்ளது.
இந்த ஆய்வில் மொத்தம் 114 நோயாளிகள் பங்கேற்றனர். அவர்களில் 44 பேருக்கு தன்னுடல் தாக்கு கல்லீரல் அழற்சி (AIH) நோயும், 70 பேருக்கு முதன்மை பித்தநாள அழற்சி (PBC) நோயும் கண்டறியப்பட்டிருந்தது.
ஆய்வில், கட்டுப்பாட்டுக் குழுவினருடன் ஒப்பிடும்போது, கல்லீரல் நோயால் பாதிக்கப்பட்டவர்களிடம் A இரத்த வகையினர் அதிகமாகவும், B இரத்த வகையினர் குறைவாகவும் காணப்பட்டனர். குறிப்பாக PBC நோயாளிகளிடம் A இரத்த வகையினர் அதிகமாக இருந்தனர். அதேசமயம் O மற்றும் AB இரத்த வகையினரிடம் குறிப்பிடத்தக்க வேறுபாடு காணப்படவில்லை.
தன்னுடல் தாக்கு கல்லீரல் நோய் என்றால் என்ன?
பொதுவாக உடலின் நோயெதிர்ப்பு மண்டலம் கிருமிகள் மற்றும் தொற்றுகளிலிருந்து நம்மைப் பாதுகாக்கிறது. ஆனால் சில நேரங்களில் நோயெதிர்ப்பு மண்டலம் தவறுதலாக உடலின் சொந்த செல்களையே தாக்கத் தொடங்கும். இதனால் ஏற்படும் பாதிப்புகளில் ஒன்றுதான் தன்னுடல் தாக்கு கல்லீரல் நோய்.
இதில் முதன்மை பித்தநாள அழற்சி (PBC) என்பது கல்லீரலில் உள்ள சிறிய பித்தநாளங்களை நோயெதிர்ப்பு மண்டலம் தாக்குவதால் ஏற்படுகிறது. இதனால் பித்தநீர் தேங்குவதுடன், காலப்போக்கில் கல்லீரலில் வடுக்கள் ஏற்பட்டு கல்லீரல் செயல்பாடு பாதிக்கப்படலாம்.
கல்லீரல் நோயின் அறிகுறிகள் என்னென்ன?
தன்னுடல் தாக்கு கல்லீரல் நோய் உள்ளவர்களுக்கு பின்வரும் அறிகுறிகள் தென்படலாம்:
-
உடல் சோர்வு மற்றும் அதிகப்படியான களைப்பு.
-
வயிற்றுப் பகுதியில் அசௌகரியம்.
-
சருமம் மற்றும் கண்கள் மஞ்சள் நிறமாக மாறுதல்.
-
கல்லீரல் வீக்கம்.
-
சருமத்தில் அரிப்பு ஏற்படுதல்.
-
மூட்டு வலி.
-
சருமத்தில் சிலந்தி வலை போன்ற இரத்த நாள அமைப்புகள் தோன்றுதல்.
-
சிலருக்கு மாதவிடாய் சுழற்சியில் மாற்றங்கள் ஏற்படுதல்.
யாரெல்லாம் கவனமாக இருக்க வேண்டும்?
இந்த அறிகுறிகள் தென்பட்டால் அலட்சியம் செய்யாமல் மருத்துவரை அணுகி உரிய பரிசோதனைகளை மேற்கொள்வது அவசியம். ஆரம்பத்திலேயே நோயைக் கண்டறிவதன் மூலம் கல்லீரல் பாதிப்புகள் தீவிரமடைவதைத் தடுக்க உதவலாம்.
இருப்பினும், A இரத்த வகையைக் கொண்ட அனைவருக்கும் கல்லீரல் நோய் ஏற்படும் என்று இந்த ஆய்வு கூறவில்லை. இரத்த வகை என்பது ஒரு சாத்தியமான தொடர்பு மட்டுமே. இதுகுறித்து மேலும் விரிவான ஆய்வுகள் தேவைப்படுகின்றன.
