தென் அமெரிக்க நாடான ஈகுவடாரின் குவாயாகில் நகரிலுள்ள Our Lady of Perpetual Help தேவாலயத்தில், சிலுவை விழுந்ததில் அருட்தந்தை பட்ரிசியோ அல்ஃப்ரெடோ சான்செஸ் மொலினாரி உயிரிழந்துள்ளார்.
குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய காணொளி தற்போது இணையத்தில் வைரலாகி பெரும் அதிர்வலைகளை தோற்றுவித்துள்ளது.

நேரலை ஒளிபரப்பில் நடந்த சோகம்
கடந்த ஒக்டோபர் 17ஆம் திகதி, பிரார்த்தனையில் ஈடுபட்டிருந்த அவரின் பின்னால் இருந்த மரச்சிலுவை திடீரென கழன்று தலை மற்றும் முதுகில் விழுந்துள்ளது.
உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட அவர், அன்றைய தினமே உயிரிழந்ததாக குவாயாகில் பேராயர் அலுவலகம் உறுதிப்படுத்தியது.

இந்தச் சம்பவம் நேரலை ஒளிபரப்பின்போது இடம்பெற்றதால், சிலுவை விழும் காட்சிகள் இணையத்தில் பரவியுள்ளன. சம்பவத்திற்கு சில நிமிடங்களுக்கு முன்பு, வாழ்க்கையின் நிலையின்மை குறித்து உரையாற்றிய பாதிரியார், மனிதர்கள் தங்கள் நேரத்தை வீணாக்காமல் கடவுளுடனும் அன்புக்குரியவர்களுடனும் செலவிட வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தார்.
சிலுவை விழுந்ததற்கான காரணம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். உயிரிழந்த அருட்தந்தை, Congregation of the Most Holy Redeemer அமைப்பின் உறுப்பினராகவும் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
