அமெரிக்காவின் டல்லாஸ், டெக்சாஸ் உள்ளிட்ட நகரங்களில் இருந்து 50 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள போர்ட் வொர்த் நகரில் வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து ஏற்பட்டது.
அவற்றில் சிறிய ரக கார்கள், சொகுசு கார்கள், 18 சக்கரங்களை கொண்ட லாரிகள் உள்ளிட்டவையும் அடங்கும். இதனால் சாலையில் போக்குவரத்து முடங்கியது. இந்த விபத்தில் 5 பேர் பலியாகினர். மேலும் பலர் சிக்கி கொண்டனர்.
விபத்து குறித்து உள்ளூர் செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியில், குறைந்தது 30 பேர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு உள்ளனர். அவர்களில் காயமடைந்த பலரது நிலைமை ஆபத்து நிலையில் உள்ளது. இந்த விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் 24 தீயணைப்பு வாகனங்கள் சென்றுள்ளன என தெரிவித்தது.
பனி படர்ந்த நிலையில் காணப்படும் சாலையே இந்த விபத்துக்கு காரணமாக இருக்கக் கூடும் என சி.என்.என். தெரிவித்துள்ளது.
பனிக்குவியலால் சாலைகள் வழுக்கிச் செல்லும் வகையில் உள்ளதால் அந்தப் பகுதி, குளிர்கால அறிவுறுத்தலுக்கு உட்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டிருந்தது என அமெரிக்க தேசிய தட்பவெப்ப சேவை அமைப்பு தெரிவித்துள்ளது.