அசைவ உணவான அயிரை மீன் குழம்பிற்கு ஈடாக சைவ அயிரை மீன் குழம்பு செய்வது குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
பொதுவாக புரட்டாசி மாதம் வந்துவிட்டாலே வீட்டில் அசைவ உணவுகள் சாப்பிடுவதை தவிர்க்கின்றனர். ஆனாலும் ஒரு ஏக்கம் எப்பொழுதும் இருக்கவும் செய்கின்றது.
அதிலும் கடல் உணவுகளில் ஒன்றான மீன் குழம்புகள் சாப்பிட அதிகமாகவே பிடிக்கும். அவ்வாறு மீன் குழம்பு விரும்பும் நபர்களுக்கு சைவ மீன் குழம்பு செய்து கொடுக்கலாம்.
அதிலும் அனைவருக்கும் பிடிக்கும் சைவ அயிரை மீன் குழம்பு எவ்வாறு செய்வது என்பதை தொடர்ந்து தெரிந்து கொள்வோம்.

தேவையான பொருட்கள்
அயிரை மீன் போன்ற வடிவத்திற்கு வாழைப்பூ – 1 கப் (சுத்தம் செய்தது)
கடலை மாவு – 3 டேபிள் ஸ்பூன்
அரிசி மாவு – 1 டேபிள் ஸ்பூன்
மிளகாய்த் தூள் – 1/2 டீஸ்பூன்
மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
புளி – எலுமிச்சம்பழ அளவு (கரைத்தது)
சின்ன வெங்காயம் – 150 கிராம் (பொடியாக நறுக்கியது)
தக்காளி – 2 (நறுக்கியது)
பூண்டு – 10 பற்கள்
பச்சை மிளகாய் – 2
குழம்பு மிளகாய்த் தூள் – 3 டேபிள் ஸ்பூன்
மல்லித் தூள் (தனியா) – 1 டேபிள் ஸ்பூன்
நல்லெண்ணெய் – 4 முதல் 5 டேபிள் ஸ்பூன்
தாளிக்க தேவையான கடுகு, வெந்தயம், சோம்பு, கறிவேப்பிலை

செய்முறை
சுத்தம் செய்த வாழைப்பூவுடன் கடலை மாவு, அரிசி மாவு, மிளகாய் தூள், மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்த்து சிறிதளவு தண்ணீர் தெளித்து பிசைந்து கொள்ளவும்.
கடாய் ஒன்றில் எண்ணெய் சேர்த்து வாழைப்பூவை உதிரி உதிரியாக போட்டு பொன்னிறமாக பொரித்து எடுத்துக் கொள்ளவும்.
மற்றொரு கடாயில் எண்ணெய் சேர்த்து தாளிப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து தாளிக்கவும். பின்பு பூண்டு மற்றும் பச்சை மிளகாய், சின்ன வெங்காயம் சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கி தக்காளியை சேர்த்து நன்றாக வதக்கவும்.

பின்பு மிளகாய் தூள், மல்லி தூள், மஞ்சள் தூள், புளி கரைசல் இவற்றுடன் தேவையான அளவு உப்பு சேர்த்து குழம்பை கொதிக்க வைக்கவும். குழம்பு கட்டியாகி எண்ணெய் பிரிந்து வரும் நேரத்தில் பொரித்து வைத்த வாழைப்பூவை சேர்த்து மிதமான தீயில் 3 முதல் 5 நிமிடங்கள் கொதிக்க வைத்து மல்லி இலை தூவி இறக்கவும்.
