உலக அரங்கிற்கு செல்லும் 'மகாராஜா' திரைப்படம்; ஹாலிவுட்டில் ரீமேக் செய்யப்படும் முதல் தமிழ் படமாக விஜய் சேதுபதி - அனுராக் காஷ்யப் நடித்த மகாராஜா படம் சாதனை

தமிழ் திரைப்பட உலகிற்கு மற்றுமொரு பெருமையாக, விஜய் சேதுபதி மற்றும் அனுராக் காஷ்யப் நடிப்பில் வெளியான 'மகாராஜா' திரைப்படம் ஹாலிவுட்டில் ரீமேக் செய்யப்படவுள்ளது. மேலும் மகாராஜா படம் ஹாலிவுட்டில் ரீமேக் செய்யப்படும் முதல் தமிழ் படம் என்ற பெருமையை பெறுகிறது.

குற்றப் பின்னணி கொண்ட விறுவிறுப்பான தமிழ்த் திரைப்படமான மகாராஜா படம், ஒரு முக்கிய ஹாலிவுட் நிறுவனத்தால் ரீமேக் செய்யப்பட உள்ளது. ஜூன் 2024-ல் வெளியான மகாராஜா, விஜய் சேதுபதியின் 50-வது படமாகும். இப்படத்தில் அனுராக் காஷ்யப், மம்தா மோகன்தாஸ், நட்டி சுப்பிரமணியம் மற்றும் சச்சனா நமிதாஸ் ஆகியோரும் நடித்துள்ளனர்.

படத்தின் கதையைப் பொறுத்தவரையில், லட்சுமி என்று அவர் அழைக்கும் தனது குப்பைத்தொட்டி காணாமல் போன பிறகு, காவல் நிலையத்திற்குச் செல்லும் ஒரு முடிதிருத்துபவரின் கதையை இப்படம் சொல்கிறது. ஒரு சாதாரண புகாராகத் தொடங்கும் இது, அவர் சென்றதற்கான உண்மையான காரணம் வெளிவரும்போது படிப்படியாக மிகவும் இருண்ட திருப்பத்தை எடுக்கிறது.

தமிழகத்தில் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் பாராட்டப்பட்ட மகாராஜா படம், சீனாவில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. சீனாவில் இப்படம் ரூ. 91.65 கோடி வசூலித்துள்ளது. இப்படத்தை தி ரூட், திங்க் ஸ்டுடியோஸ் மற்றும் பேஷன் ஸ்டுடியோஸ் தயாரித்து இருந்தன.

இந்த நிலையில் இப்படத்தின்  ரீமேக் உரிமையைப் பெறுவதற்காக ஒரு ஹாலிவுட் நிறுவனம் மகாராஜா படக்குழுவை அணுகியதாகத் தயாரிப்பாளர் சுதன் சுந்தரம் உறுதிப்படுத்தியுள்ளார். இப்படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க முன்னணி ஹாலிவுட் நடிகர் ஒருவரைப் பரிசீலித்து வருவதாகவும், இப்பணிகள் அடுத்த ஆண்டு தொடங்கக்கூடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. நடிகர்கள் தேர்வு குறித்த செய்திகளுக்கு மத்தியில், மேத்யூ மெக்கனாஹி இந்தப் படத்தில் நடிக்கப் போவதாகக் கூறப்படுகிறது. இருப்பினும், அவர் நடிப்பது இன்னும் அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்படவில்லை.