சார்ஜா:

இந்திய கிரிக்கெட் வாரியம் சார்பில் 3-வது பெண்கள் சேலஞ்ச் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள சார்ஜாவில் நேற்று முன்தினம் தொடங்கியது. நடப்பு சாம்பியன் சூப்பர் நோவாஸ், வெலோசிட்டி, டிரைல்பிளாசர்ஸ் ஆகிய 3 அணிகள் பங்கேற்றுள்ள இந்த போட்டியில் ஒவ்வொரு அணியும் மற்ற அணியுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் முடிவில் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறும். முதலாவது லீக் ஆட்டத்தில் வெலோசிட்டி அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் சூப்பர் நோவாசை வீழ்த்தியது. இந்த நிலையில் நேற்று மாலை நடந்த 2-வது லீக் ஆட்டத்தில் மிதாலிராஜ் தலைமையிலான வெலோசிட்டி-ஸ்மிர்தி மந்தனா தலைமையிலான டிரைல்பிளாசர்ஸ் அணிகள் மோதின.

இதில் ‘டாஸ்’ ஜெயித்த வெலோசிட்டி கேப்டன் மிதாலிராஜ் பேட்டிங்கை தேர்வு செய்தார். இதன்படி முதலில் பேட் செய்த வெலோசிட்டி அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்து இருந்தது. அதிரடி வீராங்கனை ஷபாலி வர்மா (13 ரன், 9 பந்து, ஒரு பவுண்டரி, ஒரு சிக்சர்) 3-வது ஓவரில் ஜூலன் கோஸ்வாமி பந்து வீச்சில் கிளீன் போல்டு ஆனார். அடுத்து வந்த மிதாலிராஜ் (1 ரன்), வேதா கிருஷ்ணமூர்த்தி (0) ஆகியோரது விக்கெட்டை இடக்கை சுழற்பந்து வீச்சாளர் சோபி எக்லெஸ்டோன் (இங்கிலாந்தை சேர்ந்தவர்) ஒரே ஓவரில் அடுத்தடுத்த பந்தில் கபளீகரம் செய்தார். மற்றொரு தொடக்க வீராங்கனை டேனி வயாட் 3 ரன்னிலும், சுஷ்மா வர்மா 1 ரன்னிலும் ஆட்டம் இழந்தனர். ஸ்டம்பை குறி வைத்து தொடுத்த தாக்குதலில் நிலைகுலைந்த வெலோசிட்டி அணி பவர்- பிளேயில் (முதல் 6 ஓவர்களில்) 22 ரன்னுக்குள் 5 விக்கெட்டுகளை இழந்து திண்டாடியது. தொடர்ந்து விக்கெட்டுகளை வேகமாக பறிகொடுத்த அந்த அணி 15.1 ஓவர்களில் வெறும் 47 ரன்னில் சுருண்டது. டிரைல்பிளாசர்ஸ் அணி தரப்பில் சுழற்பந்து வீச்சாளர் சோபி எக்லெஸ்டோன் 3.1 ஓவர்களில் ஒரு மெய்டனுடன் 9 ரன் மட்டுமே விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டும், ஜூலன் கோஸ்வாமி, ராஜேஸ்வரி கெய்க்வாட் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.

பின்னர் எளிதான இலக்கை நோக்கி ஆடிய டிரைல்பிளாசர்ஸ் அணி 7.5 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்புக்கு 49 ரன்கள் சேர்த்து 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. கேப்டன் மந்தனா 6 ரன்னில் ஆட்டம் இழந்தார். தொடக்க வீராங்கனை டியாந்த்ரா டோட்டின் 29 ரன்னும் (28 பந்து, 3 பவுண்டரி), ரிச்சா கோஷ் 13 ரன்னும் (10 பந்து, ஒரு பவுண்டரி, ஒரு சிக்சர்) எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தனர். டிரைல்பிளாசர்ஸ் வீராங் கனை சோபி எக்லெஸ்டோன் ஆட்டநாயகி விருது பெற்றார்.

நாளை (சனிக்கிழமை) நடைபெறும் 3-வது மற்றும் கடைசி லீக் ஆட்டத்தில் டிரைல் பிளாசர்ஸ்-சூப்பர் நோவாஸ் அணிகள் (இரவு 7.30 மணி) சந்திக்கின்றன.