தினமும் நமது வீடுகளில் சாம்பார் சட்னி இப்படி வைத்து சாப்பிட்டுக்கொண்டே போர் அடித்திருக்கும். பொதுவாக காய்கறி என்றால் எல்லோரும் விரும்ப மாட்டார்கள்.

ஆனால் வீட்டில் கொத்தவரங்காய் இருந்தால் இந்த கொத்தவரங்காய் காரக்குழம்பு வைத்து சாப்பிட்டு பாருங்கள் சுவை சிறப்பாக இருக்கும்.
பதிவில் கூறப்படும் இந்த கொத்தவரங்காய் கார குழம்பு மிகவும் சிறப்பானது. காரணம் இது நெல்லை ஷ்பெஷல்.
ஆனால் பலரும் இதை சாப்பிட்டிருக்க மாட்டார்கள். அந்த வகையில் இதை எப்படி செய்யலாம் என்பதை பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்
- கொத்தவரங்காய் - 200 கிராம் (நறுக்கியது)
- சின்ன வெங்காயம் 10
- கறிவேப்பிலை - 1 கொத்து
- புளி - சிறிய நெல்லிக்காய் அளவு
- உப்பு - தேவையான அளவு
- தாளிப்பு வடகம் - 1 ஸ்பூன்
- சாம்பார் பொடி - 1 ஸ்பூன்
- மஞ்சள் தூள் - அரை ஸ்பூன்
- மிளகாய் தூள் - 1 ஸ்பூன்
- வெல்லம் - ஒரு சிட்டிகை
- கடுகு 1 ஸ்பூன்
- உளுத்தம்பருப்பு - 1 ஸ்பூன்
- வெந்தயம் - அரை ஸ்பூன்
- நல்லெண்ணெய் - 2 ஸ்பூன்

செய்முறை
- கொத்தவரங்காய் குழம்பு செய்ய முதலில் புளியை ஊறவைத்து சாறு எடுத்து வைத்துக் கொள்ளவும்.
- பின்னர் கடாயில் எண்ணெய் சூடாக்கி கடுகு, உளுத்தம்பருப்பு, வெந்தயம் போன்றவற்றை தாளிக்கவும்.
- அதனுடன் வடகம், கறிவேப்பிலை, சின்ன வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.
- பின்னர் அதில் கொத்தவரங்காய் சேர்த்து 3–4 நிமிடம் வதக்கவும்.
- பின்னர் மசாலா தூள்கள் சேர்த்து நன்றாக கலக்கவும்.
- தண்ணீர் சேர்த்து கொதிக்கவைத்து, புளிச்சாறு, உப்பு, வெல்லம் சேர்த்து நன்றாக கலக்கவும்.
- இதை நன்றாக கெட்டியாகும் வரை கொதிக்க விட்டு இறக்கினால் கொத்தவரங்காய் குழம்பு தயார்.
