இந்தியாவின் எரிசக்தி பயன்பாடு இரட்டிப்பாகும் என்று பிரதமர் மோடி நரேந்திர மோடி குறிப்பிட்டுள்ளார்.
இந்திய எரிசக்தி கூட்டமைப்பு மாநாடு நேற்று (திங்கட்கிழமை) நடைபெற்றது. அதில் காணொலி காட்சி மூலம் கலந்துகொண்ட அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது தொடர்ந்து தெரிவித்த அவர், “ கொரோனா பரவல் காரணமாக உலகளாவிய எரிசக்தி தேவை, மூன்றில் ஒரு பங்கு குறைந்துள்ளது. முதலீட்டு முடிவுகள் பாதிக்கப்பட்டுள்ளன. அடுத்த சில ஆண்டுகளிலும் எரிசக்தி தேவை குறையும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
ஆனால் வருங்காலத்தில் இந்தியாவின் எரிசக்தி பயன்பாடு இரட்டிப்பாகும் என்று தோன்றுகிறது. இதனால் இந்தியாவால் உலகளாவிய எரிசக்தி தேவை அதிகரிக்கும். இந்தியா தற்போது தூய்மையான புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆதாரங்களை நாடியுள்ளது.
கார்பனை குறைவாக வெளியிடும் நாடுகளில் இந்தியாவும் ஒன்று. இந்தியாவில் எரிசக்தி துறையில் கடந்த 5 ஆண்டுகளில் புரட்சிகரமான சீர்திருத்தங்கள் ஏற்பட்டுள்ளன. இந்தியாவின் எண்ணெய் சுத்திகரிப்பு திறனை ஆண்டுக்கு 25 கோடி டன் என்ற நிலையில் இருந்து 2025-ம் ஆண்டுக்குள் 45 டன்னாக உயர்த்த திட்டமிட்டுள்ளோம்” எனத் தெரிவித்துள்ளார்.