சுதந்திரமான வெளிப்படையான இந்தோ – பசுபிக் பிராந்தியம் குறித்த இரு நாடுகளினதும் பொதுவான இலக்குகளில் மேலும் முன்னேற்றத்தை காண்பதற்காகவே அமெரிக்க இராஜாங்க செயலாளர் மைக் பொம்பியோ இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார் என அமெரிக்க இராஜாங்க திணைக்களம் தெரிவித்துள்ளது.

அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் பேச்சாளர் மோர்கன் ஓர்டகஸ் அறிக்கையொன்றை வெளியிட்டு இதனைத் தெரிவித்துள்ளார்.

வலுவான இறையாண்மையுள்ள இலங்கையுடனான கூட்டு செயற்பாடு குறித்த அமெரிக்காவின் அர்ப்பணிப்பை வெளிப்படுத்துவதற்கு இந்த விஜயம் உதவும் என அவர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

ஓக்டோபர் 25ஆம் திகதி முதல் 30 திகதி வரையில் அமெரிக்க இராஜாங்க செயலாளர் இந்தியா, இலங்கை, மாலைதீவு, இந்தோனேசியா ஆகிய நாடுகளுக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.

இந்த பயணத்தில் எதிர்வரும் 28ஆம் திகதி இவர் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார் என்பதுடன், இதன்போது அவர், ஜனாதிபதி மற்றும் பிரதமரை சந்தித்து பேசவுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.