20 ஆவது திருத்தத்தில் பாரிய மாற்றங்களைச் செய்யுமாறு அரசாங்கத்தின் மீது அழுத்தம் அதிகரித்து வரும் நிலையில், இந்த விவகாரம் குறித்து விவாதிக்க ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சித் தலைவர்கள் கூட்டம் இன்று நடைபெறவுள்ளது.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்றக் குழு கூட்டம் நாளை கூடவுள்ள நிலையில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) இந்த கூட்டம் நடைபெறுகின்றது.

ஜனாதிபதி செயலகத்தில் நடைபெறவுள்ள இந்த கூட்டத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இருவரும் கலந்து கொள்வார்கள் என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் அமைச்சருமான விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.

இதன்போது 20 ஆவது திருத்தம் குறித்து தங்கள் கருத்துக்களை ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு தெரிவிக்க கட்சி தலைவர்களுக்கு இதன்போது வாய்ப்பு கிடைக்கும் என அவர் கூறினார்.

இந்த மாத தொடக்கத்தில் தேசிய சுதந்திர முன்னணி பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிற்கு எழுதிய கடிதத்தில் 20 ஆவது திருத்தத்தில் உள்ள உட்பிரிவுகள் குறித்து கவலை வெளியிட்டுருந்தது.

ஜனாதிபதியையும் பொதுஜன பெரமுன அரசாங்கத்தையும் ஆட்சிக்கு கொண்டுவர கடுமையாக உழைத்த தேசிய கட்சிகளிடமிருந்து கூட 20 ஆவது திருத்தம் இப்போது விமர்சனத்திற்கு உள்ளாகி வருவதாக வீரவன்ச அதில் குறிப்பிட்டிருந்தார்.

ஆகவே இந்த தரப்புக்கள் கருத்துக்களை கருத்தில் கொள்ள வேண்டும் என்றும் கட்சித் தலைவர்கள் கூட்டத்தில், இந்தத் தரப்பின் கருத்துகளையும் திருத்தம் குறித்த தங்கள் கருத்துக்களையும் தெரிவிப்போம் என நம்புவதாவும் விமல் வீரவன்ச கூறினார்.

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன எதிர்வரும் செவ்வாய்க்கிழமை 20 வது திருத்த சட்டமூலம் தொடர்பான உயர் நீதிமன்றத்தின் தீர்மானத்தை அறிவித்ததை அடுத்து அதன் மீதான விவாதம் புதன் மற்றும் வியாழக்கிழமைகளில் நடைபெற உள்ளது.

வாக்கெடுப்பு தேவைப்படும் உட்பிரிவுகள் திருத்தப்பட்டவுடன், 225 உறுப்பினர்களைக் கொண்ட சட்டமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையுடன் திருத்தத்தை நிறைவேற்ற அரசாங்கத்திற்கு 150 வாக்குகள் தேவைப்படும்.

தற்போது நாடாளுமன்றில் பொதுஜன பெரமுன மற்றும் அதன் பங்காளி கட்சிகள் தற்போது நாடாளுமன்றத்தில் 145 ஆசனங்களை கொண்டுள்ளன.

இவ்வாறான நிலையில் தேவையான எண்ணிக்கையிலான வாக்குகளைத் திரட்ட முடியும் என்று அரசாங்கத்தின் தலைவர்கள் நம்பிக்கை தெரிவித்தாலும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சிக்குள் இருக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் இந்த திருத்ததில் மாற்றத்தை கோருகின்றமை இங்கு குறிப்பிடத்தக்கது.