இட்லி, தமிழகம் உள்ளிட்ட தென்னிந்தியாவில் பெரும்பாலோரால் எப்போதும் விரும்பப்படுகிற உணவு என்று சொன்னால் அதை யாரும் மறுக்க முடியாது.

அரிசி மாவையும், உளுந்த மாவையும் பக்குவமாக கலந்து, இட்லி தட்டில் ஊற்றி, நீராவியில் வேக வைத்து சுடச்சுட ஆவி பறக்க எடுத்து, வாழை இலையில் பரிமாறி, அதை சாம்பார், தேங்காய் சட்னி, தக்காளி சட்னி, நல்லெண்ணெய் அல்லது நெய்யில் குழப்பிய மிளகாய் பொடி, சிக்கன் குழம்பு, மட்டன் குழம்பு எதுவாக இருந்தாலும் தொட்டுச் சாப்பிட்டால், அதன் சுவையே தனி; அலாதி.

அப்படிப்பட்ட இட்லியை ஒருவர் விமர்சித்தால், அவரை சும்மா விட்டு விட முடியுமா? அதான் டுவிட்டரில் சமூக ஊடக ஆர்வலர்கள் விவாதத்தால் வறுத்தெடுத்து விட்டனர்.

இங்கிலாந்து வரலாற்று ஆய்வாளர் எட்வர்டு ஆண்டர்சனிடம், உணவு நிறுவனம் ஒன்றை சேர்ந்தவர், “உலகின் மிகவும் சலிப்பான உணவு எது என கருதுகிறீர்கள்?” என கேள்வி எழுப்பினார்.

அதற்கு அவர், “உலகத்திலேயே மிகவும் சலிப்பான விஷயம் இட்லிதான்” என பதில் அளித்தார்.

அவ்வளவுதான் சமூக ஊடக ஆர்வலர்கள் டுவிட்டரில் படையெடுத்து விட்டனர்.

முன்னாள் மத்திய மந்திரி சசி தரூர் எம்.பி.யின் மகனும், அமெரிக்க கட்டுரையாளருமான இஷான் தரூர், எட்வர்டு ஆண்டர்சனை விமர்சித்து, “நான் டுவிட்டரில் மிகவும் தாக்குதலை எதிர்கொள்வேன் என நினைக்கிறேன்” என டுவிட்டரில் குறிப்பிட்டார்.

உடனே அவரது தந்தை சசி தரூர் எம்.பி., “ஆமாம், மகனே. சிலர் உண்மையிலேயே உலகத்தில் சவாலை ஏற்படுத்தி இருக்கிறார்கள். அவர்கள் நாகரிகத்தை எடுத்துக்கொள்வது கடினம். இட்லியை பாராட்டுவது, கிரிக்கெட்டை ரசிப்பது எல்லாம் எல்லோருக்கும் வாய்க்காது.

வாழ்க்கை என்னவாக இருக்கும் என்று தெரியாத அந்த ஏழை மனிதருக்காக (எட்வர்டு ஆண்டர்சன்) பரிதாபப்படுங்கள்” என குறிப்பிட்டார்.

உணவு ஆய்வாளர் புஷ்பேஷ் பந்த், “ஆண்டர்சனுக்கு சசி தரூரின் டுவிட், சரியான பதிலடி. இட்லி அழகான, சீரான உணவு” என குறிப்பிட்டார்.

உணவு விமர்சகர் ராகுல் வர்மாவோ, “இட்லிக்கென்று தனியாக சுவையில்லாமல் இருக்கலாம். ஆனால் அதை எதனோடு தொட்டு சாப்பிடுகிறோமோ அதைப் பொறுத்தே அதன் சுவை அமைகிறது. சட்னி, சாம்பார், கோழி, ஆட்டிறைச்சி, பன்றி இறைச்சி குழம்புடன் இட்லி சாப்பிடுகிறபோது அது அலாதியான சுவை” என குறிப்பிட்டார். புகழ் பெற்ற உணவு ஆய்வாளர் கே.டி.அச்சயா இட்லியின் பிறப்பிடம் இந்தோனேசியா என கூறி இருப்பதையும் சுட்டிக்காட்டியுள்ளார்.

டெல்லியை சேர்ந்த மாணவி நீலிமா வைத், தன் அம்மா தயாரித்து தருவதே சிறந்த இட்லி என மெச்சி உள்ளார்.

உணவு விமர்சகர் பிரிதா சென், “இட்லி மிகவும் பிரபலமானது. ஏனெனில் அதன் ஆதரவாளர்கள் அதை உலகம் முழுக்க எடுத்துச்சென்றுள்ளனர்” என இட்லியின் பெருமையை பறைசாற்றி உள்ளார்.

இப்படி இட்லி பற்றி டுவிட்டரில் விவாதம் வைரலாக, அமெரிக்காவில் ஜனநாயக கட்சியின் துணை ஜனாதிபதி வேட்பாளராக களம் காண்கிற கமலா ஹாரிஸ், இந்திய சமூகத்தினரிடம் சமீபத்தில் பேசும்போது, “என்னையும், என் சகோதரி மாயாவையும் நாங்கள் வளர்ந்து கொண்டிருந்தபோது அம்மா, சென்னைக்கு அழைத்துச்சென்றது உண்டு. ஏனென்றால் அவர் எங்கிருந்து வந்தார், அவரது வம்சாவளி என்ன என்பதை நாங்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்று விரும்பினார். அங்கு நல்ல இட்லி மீது ஒரு நேசத்தை ஏற்படுத்தினார்” என கூறியது இட்லியின் பெருமைக்கு சிகரம்.

நமது உள்ளங்களை கொள்ளை கொள்ளும் இட்லியின் பெருமையை உலகுக்கு உணர்த்த மார்ச் 30-ந் தேதி உலக இட்லி தினம் கொண்டாடப்படுவது ஸ்பெஷல். ஆமாம், இதெல்லாம் அந்த எட்வர்டு ஆண்டர்சனுக்கு தெரியாதா?!