கொரோனா தடுப்பூசிகளை வாங்க பணக்கார நாடுகள் போட்டி போடுகின்றன. பாதிக்கும் மேலான தடுப்பூசி டோஸ்களை வாங்குவதற்கு அவை முன்னணி மருந்து நிறுவனங்களுடன் ஒப்பந்தம் போட்டு விட்டன என அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.
கொரோனா வைரஸ் பெருந்தொற்று நோய்க்கு கடிவாளம் போடுவதற்கு இங்கிலாந்து, அமெரிக்கா, சீனா, ரஷியா, இந்தியா, இஸ்ரேல் என பல நாடுகளும் தடுப்பூசியை உருவாக்கி, அவற்றை பல்வேறு கட்டங்களாக மனிதர்களுக்கு செலுத்தி பார்த்து சோதித்து வருகின்றன.
இன்னும் சந்தைக்கு எந்தவொரு தடுப்பூசியும் பகிரங்க விற்பனைக்கு வரவில்லை.
இந்த நிலையில், உலக மக்கள் தொகையில் 13 சதவீதத்தை மட்டுமே கொண்டுள்ள பணக்கார நாடுகள், ஏற்கனவே முன்னணியில் உள்ள 5 தடுப்பூசிகளின் பாதிக்கும் மேலான (51 சதவீத) டோஸ்களை வாங்குவதற்கு ஒப்பந்தம் போட்டு உள்ளன என்ற அதிர்ச்சி தகவலை ஆக்ஸ்பாம் தொண்டு நிறுவனம் வெளியிட்டுள்ளது.
ஜி-20 நாடுகளின் சுகாதாரம் மற்றும் நிதி மந்திரிகள் கூடி கொரோனா வைரஸ் பெருந்தொற்று நோய் பற்றி விவாதிக்க உள்ள நிலையில் இந்த தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதுபற்றி ஆக்ஸ்பாம் தொண்டு நிறுவனம் கூறுகையில், “தேவைப்படுகிற அனைவருக்கும் போதுமான தடுப்பூசிகளை தயாரிக்கும் திறன் இந்த தயாரிப்பாளர்களுக்கு இல்லை. முன்னணியில் உள்ள 5 தடுப்பூசிகளும் வெற்றி பெற்றாலும் கூட இதற்கு சாத்தியம் இல்லை. உலக மக்கள் தொகையில் மூன்றில் இரு பங்கினர் அல்லது 61 சதவீதத்தினருக்கு 2022-ம் ஆண்டு வரை தடுப்பூசி கிடைக்காது” என கூறி உள்ளது.
இந்த கணக்கீடுகள், ஏக போகங்களையும், லாபங்களையும் பாதுகாக்கிற மருந்து நிறுவனங்களை அம்பலப்படுத்துகின்றன. இவை பணக்கார நாடுகளுக்கு சாதகமாக இருக்கும்.
அதே நேரத்தில் உலக மக்களில் பெரும்பாலோர் தடுப்பூசிக்கு தேவையானதை விட கூடுதல் காலம் காத்திருப்பார்கள் என்றும் ஆக்ஸ்பாம் தொண்டு நிறுவனம் கூறுகிறது.
அமெரிக்காவின் மாடர்னா நிறுவனம், லாபம் சம்பாதிப்பதற்காக தனது தடுப்பூசி டோஸ்களை பணக்கார நாடுகளுக்கு வழங்கத்தான் வாக்குறுதி அளித்துள்ளது என்றும், அதே நேரத்தில் அஸ்ட்ரா ஜெனேகா நிறுவனம் மூன்றில் இரு பங்கு டோஸ்களை வளரும் நாடுகளுக்கு அளிக்க உறுதி தந்துள்ளது எனவும் ஆக்ஸ்பாம் தொண்டு நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதையொட்டி இந்த நிறுவனம் விடுத்துள்ள அறிக்கையில், “ஆக்ஸ்பாம் மற்றும் உலகின் பிற அமைப்புகள், மக்கள் தடுப்பூசிக்கு அழைப்பு விடுத்துள்ளன. தேவையின் அடிப்படையில் தடுப்பூசி அனைவருக்கும் இலவசமாக கிடைக்க வேண்டும். நியாயமான முறையில் வினியோகிக்கப்பட வேண்டும். மருந்து நிறுவனங்கள், தடுப்பூசிகளை பரந்த அளவில் உற்பத்தி செய்ய அனுமதித்தால்தான் இது நடக்கும். தங்கள் ஏகபோகத்தை பாதுகாப்பதற்கும், அதிகவிலை தருவோருக்கு விற்பதற்கும் பதிலாக அவை தங்கள் காப்புரிமை பற்றிய அறிவை இலவசமாக பகிர்ந்து கொள்ள வேண்டும்” என கூறி உள்ளது.
எல்லோருக்கும் தடுப்பூசி வழங்குவதற்கு உலக பொருளாதாரத்தில் 1 சதவீதத்துக்கும் குறைவாகவே செலவாகும் எனவும் ஆக்ஸ்பாம் கணித்துள்ளது.