பொதுவாகவே மாலை நேரம் வந்தாலே வீட்டில் நுளம்பு தொல்லை தாங்க முடியாது. நுளம்புகளுக்கு அதிகம் பயப்படக் காரணம், அதனால் ஏற்படும் டெங்கு காய்ச்சல், மலேரியா போன்ற நோய்களே ஆகும்.
நுளம்புகளை விரட்ட நம் அன்றாட வாழ்வில் பயன்படுத்தும் பொருட்கள் எல்லாம் அதிகமாக ரசாயனம் கலந்ததாகவே காணப்படுகின்றது. இதனால் வீட்டில் பல்வேறு ஆரோக்கிய பிரச்சினைகள் மற்றும் பக்க விளைவுகளை சந்திக்க வேண்டியதாக இருக்கும்.
அதில் முக்கியமான ஒன்று தான் நுளம்பு சுருள். இது நுளம்புகளை விரட்ட வீட்டில் பயன்படுத்தும் ஒரு சாதாரண பொருள்தான் எனினும் அதனைத் தொடர்ந்து உபயோகிப்பதால் உடல் உபாதைகள் கண்டிப்பாக ஏற்படக்கூடும்.
குறிப்பாக வீட்டில் இருக்கும் குழந்தைகள் மற்றும் வயதானவர்களை இது அதிகமாக தாக்குகின்றது.எனவே எந்த விதமான பக்க விளைவுகளும் இல்லாமல் வீட்டில் இருக்கும் சில இயற்கையான பொருட்களை வைத்தே எவ்வாறு நுளம்புகளை விரட்டலாம் என இந்த பதிவில் பார்க்கலாம்.
பூண்டு:
நுளம்புகளுக்கு பூண்டு வாசனை பிடிக்காதாம். இதனால் நுளம்புகளை விரட்டுவதற்கு பூண்டு சிறந்த தெரிவாகும். இதற்கு 5 - 10 பூண்டு துண்டுகளை ஒரு பாட்டிலில் தண்ணீர் நிரப்பி அதனுடன் சேர்த்து நன்கு கலந்து, இந்த தண்ணீரை வீடு முழுவதும் தெளித்தால் நுளம்புகள் வீட்டுப்பக்கமே நெருங்காது.
கற்பூரம்:
நுளம்புகளை விரட்டுவதற்கு கற்பூரத்தையும் பயன்படுத்தலாம். இதற்கு வீட்டின் கதவுகளை மூடிவிட்டு கற்பூரம் ஏற்ற வேண்டும்.கற்பூரத்தை ஏற்றி அரை மணி நேரம் கழித்து, கதவு மற்றும் ஜன்னல்களைத் திறந்துவிட்டால் இந்த வாசனைக்கு நுளம்புகள் வராது.
வேப்ப எண்ணெய்:
வேப்ப எண்ணெய்யை பயன்படுத்துவதன் மூலமும் நுளம்புகளை எளிமையாக விரட்டலாம். வேப்ப எண்ணெயை சருமத்தில் தடவினால் நுளம்புகள் உங்கள் பக்கமே வராது. இதனை நேரடியாக உடலில் தடவாமல் தண்ணீரில் கலந்து வெளியில் தெரியக்கூடிய உடல் பாகங்களில் தடவினால் நுளம்புகளிடமிருந்து எளிமையாக தப்பித்து விடலாம்.
எலுமிச்சை, கிராம்பு :
எலுமிச்சை பயன்படுத்துவதும் நுளம்புகளின் தொல்லையில் இருந்து பாதுகாத்துக்கொள்ள துணைப்புரியும். இதற்கு முதலில் எலுமிச்சையை பாதியாக வெட்டி ,சில கிராம்புகளை அரைக்கவும். பிறகு கிராம்பில் எலுமிச்சையில் சாறு சேர்த்து வீட்டின் ஒரு மூலையில் வைத்துவிட்டால் நுளம்புகள் வீட்டில் இருந்து தெறித்து ஓடி விடும். எலுமிச்சையை பாதியாக வெட்டி அதில் கிராம்புகளை குத்தியும் வைக்கலாம்.
துளசி இலைகள்:
துளசி இலைகள் நுளம்புகளை விரட்டுவதில் மிகவும் வீரியத்துடன் இருக்கும். துளசி இலைகளை நன்றாக அரைத்து சாறு தயாரித்து, சாற்றை ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் ஊற்றி வீடு முழுவதும் ஸ்ப்ரே செய்தால் நுளம்புகள் இந்த வாசனைக்கு வீட்டில் இருந்து ஒடிவிடும். துளசி இலைகளை காய வைத்து எரிப்பதன் மூலமும் நுளம்புகளை விரட்டலாம்.