கடந்த 23 ஆண்டில் மலேசியாவில் மெட்ரோ ரெயிலில் மிகப்பெரிய விபத்து நிகழ்ந்திருப்பது இதுதான் முதல் தடவையாகும்.

 

மலேசிய நாட்டில் 23 ஆண்டுகளாக மெட்ரோ ரெயில் சேவை நடந்து வருகிறது. கோலாலம்பூரில் பெட்ரான் இரட்டை கோபுரம் அருகே உள்ள சுரங்கப்பாதையில் நேற்று பெரிய விபத்து ஏற்பட்டது.

 


இரட்டை கோபுரம் அருகே கே.எல்.சி.சி. ரெயில் நிலையம் உள்ளது. இதில் இருந்து 100 மீட்டர் தூரத்தில் மெட்ரோ ரெயில் ஒன்று பழுதாகி நின்றது. அதை பழுது நீக்கும் பணி நடந்து கொண்டு இருந்தது.

அப்போது அதே பாதையில் எதிர்திசையில் மற்றொரு ரெயில் வந்தது. அந்த ரெயில் நின்று கொண்டிருந்த ரெயில் மீது பயங்கரமாக மோதியது. ரெயிலில் 200-க்கும் மேற்பட்ட பயணிகள் அமர்ந்து இருந்தனர்.

மோதிய வேகத்தில் பெட்டிகள் நொறுங்கின. அதில் பயணிகள் சிக்கி படுகாயம் அடைந்தார்கள். 213 பயணிகளுக்கு காயம் ஏற்பட்டது. அவர்களில் 47 பேருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. 162 பேர் லேசான காயங்களுடன் தப்பினார்கள்.

தகவல் தொடர்பில் ஏற்பட்ட கோளாறு காரணமாக இந்த விபத்து நடந்துவிட்டதாக ரெயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. கடந்த 23 ஆண்டில் மலேசியாவில் மெட்ரோ ரெயிலில் மிகப்பெரிய விபத்து நிகழ்ந்திருப்பது இதுதான் முதல் தடவையாகும்.