கொழும்பு மாநகர சபை அதிகாரத்திற்கு உட்பட்ட பிரதேசத்தில் மாத்திரம் இதுவரை 34 ஆயிரத்திற்கும் அதிகமானோருக்கு சைனோபார்ம் தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக கொழும்பு மாநகர சபையின் தொற்றுநோயியல் நிபுணர் வைத்தியர் தினுகா குருகே தெரிவித்தார்.

இன்றைய தினத்தில் சுமார் 5 ஆயிரம் பேருக்கு சைனோபார்ம் தடுப்பூசி போடப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

கொழும்பு நகரில் வசிப்பவர்கள் மற்றும் நகரில் பணிபுரியும் நபர்களுக்கு முன்னுரிமை வழங்கி தடுப்பூசி வழங்கும் வேலைத்திட்டம் செயற்படுத்தப்படுவதாக வைத்தியர் தெரிவித்தார்.

கொழும்பு நகரில் முன்னெடுக்கப்படும் கொவிட் தடுப்பூசி வழங்கும் வேலைத்திட்டம் காரணமாக புதிய கொவிட் தொற்றாளர்களில் வீழ்ச்சியை காணக்கூடியதாக உள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.

புதுவருட கொவிட் கொத்தணி ஆரம்பமான பின்னர் இதுவரை கொழும்பு நகர எல்லையில் 800 கொவிட் தொற்றாளர்கள் மாத்திரமே பதிவாகியுள்ளதாக கொழும்பு மாநகர சபையின் தொற்று நோயியல் நிபுணர் வைத்தியர் தினுகா குருகே தெரிவித்தார்.