ஆக்சிஜன், ரெம்டெசிவிர் மருந்துகள் உள்ளிட்ட மருத்துவ உபகரணங்களுக்கு கடும் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

இந்தியாவில் கொரோனா தொற்றின் 2வது அலை மிகத் தீவிரமாக பரவி வருகிறது. இதன் காரணமாக தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், பல மருத்துவமனைகளில் நோயாளிகளுக்குத் தேவையான ஆக்சிஜன், ரெம்டெசிவிர் மருந்துகள் உள்ளிட்ட மருத்துவ உபகரணங்களுக்கு கடும் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

இதனை சரி செய்ய அரசு சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், வெளிநாடுகளில் இருந்தும் ஆக்சிஜன் சிலிண்டர்கள் உள்ளிட்ட கொரோனா சிகிச்சைக்குத் தேவையான மருத்துவ உபகரணங்கள் சரக்கு விமானங்கள் மூலமாக அனுப்பி வைக்கப்படுகின்றன.

அந்த வகையில், ஒடிசா மாநிலம் கலிங்கா நகர் மற்றும் ரூர்கெலா பகுதிகளில் இருந்து முதற்கட்டமாக ரயில் மூலம் தமிழகத்திற்கு 110 மெட்ரிக் டன் ஆக்சிஜன் கொண்டுவரப்பட்டிருக்கிறது. இதேபோல் அடுத்த இரண்டு வாரங்களுக்கு, நாள்தோறும் 110 மெட்ரிக் டன் ஆக்சிஜன் கொண்டுவர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.

இதற்காக சேலம் வன அதிகாரி பெரியசாமி மற்றும் வேளாண் துறை கீழ்நிலை செயலாளர் நிஷாந்த் கிருஷ்ணா ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் இருவரும் ஒடிசாவில் இருந்து ஆக்சிஜன் அனுப்பும் பணியை மேற்கொள்வார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.