இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் இரண்டாவது அலை மிக மோசமான பாதிப்புகளை ஏற்படுத்திவருகிறது. யாரும் எதிர்பாராதவகையில் இரண்டாவது அலை சுனாமி போன்ற தாக்குதலை ஏற்படுத்தியுள்ளது. இந்திய அளவில் நாள் ஒன்றுக்கு 3.5 லட்சத்துக்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுவருகின்றனர். கொரோனா பாதிப்புகளைக் கட்டுப்படுத்த முடியாமல் மத்திய, மாநில அரசுகள் திணறிவருகின்றனர். கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவருகின்றன. இருப்பினும், கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த முடியவில்லை. ஏற்கெனவே, மகாராஷ்டிராவில் இரவு நேர ஊரடங்கு உள்ளிட்ட முக்கிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

கர்நாடகாவில் 14 நாள்கள் முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ராஜஸ்தானில் நாள் ஒன்றுக்கு கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை 16,000-த்துக்கும் அதிகமாக இருந்துவருகிறது. இந்தநிலையில், நேற்று அம்மாநில முதல்வர் அசோக் கெல்லாட்டின் மனைவி சுனிதா கெல்லாட்டுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.

இதுதொடர்பாக அசோக் கெல்லாட் பதிவிட்ட ட்விட்டர் பதிவில், ‘என்னுடைய மனைவி சுனிதா கெல்லாட்டுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. அவருக்கு அறிகுறி தெரியவில்லை. கொரோனா வழிமுறைகளின்படி, வீட்டில் தனிமைப்படுத்திக்கொண்டு சிகிச்சையளிக்கப்படுகிறது. நானும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தனிமைப்படுத்திக்கொண்டேன்’ என்று குறிப்பிட்டிருந்தார். இந்தநிலையில், அவருக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக அவருடைய ட்விட்டர் பதிவில், ‘எனக்கு கொரோனா பாதிப்ப உறுதி செய்யப்பட்டுள்ளது. எனக்கு அறிகுறிகள் இல்லை. நான் நன்றாக இருக்கிறேன். கொரோனா நடைமுறையைப் பின்பற்றி தனிமைப்படுத்தலில் இருந்துகொண்டு தொடர்ந்து பணியாற்றுவேன்’ என்று குறிப்பிட்டுள்ளார்.