கடன் வழங்குவதாக ஆசைக்காட்டி ஆன்லைன் மூலம் தொடர்பு கொள்ளும் கும்பல்கள் அனுப்பும் QR Code -ஐ ஸ்கேன் செய்ய வேண்டாம் என எஸ்.பி.ஐ வங்கி வாடிக்கையாளர்களை கடுமையாக எச்சரித்துள்ளது.
ஆன்லைன் மோசடி குறித்து எஸ்.பி.ஐ வங்கி முக்கியமான விழிப்புணர்வு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், நாடு முழுவதும் QR code ஸ்கேன் மூலம் ஆன்லைன் மோசடிகள் அரங்கேறி வருவதாகவும், அது குறித்து வாடிக்கையாளர்கள் விழிப்புணர்வுடன் இருக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளது. பணம் செலுத்த வேண்டியிருக்கும் இடங்களைத் தவிர மற்ற எதற்காகவும் QR code ஸ்கேனில் ஈடுபட வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளது. இது தொடர்பாக YOU TUBE - ல் விடியோ ஒன்றையும் எஸ்.பி.ஐ (SBI) வெளியிட்டுள்ளது.
கொரோனா வைரஸ் பாதிப்பு உச்சகட்டத்தில் இருக்கும் இந்த சூழலில் பலரும் ஆன்லைன் மூலம் பணப்பரிவர்த்தனைகளை மேற்கொண்டு வருகின்றனர். காய்கறி வாங்குவது முதல் கடன் தொகை செலுத்துவது வரை டிஜிட்டல் பேமண்டஸ் முறையை மக்கள் உபயோகப்படுத்துகின்றனர். இது மிகப்பெரிய நன்மையாக இருக்கும் அதே வேளையில், ஆன்லைன் மோசடி கும்பலுக்கான வாய்ப்பாகவும் மாறியுள்ளது. வங்கிகளின் பெயரில் பொதுமக்களுக்கு போலியாக மெசேஜ் அனுப்பும் மோசடி கும்பல், கடன் வழங்குகிறோம், சலுகைகள் வழங்கப்படும் போன்ற கவர்ச்சிகரமான அறிவிப்புகளைக் கொடுக்கின்றனர்.
இதனை உண்மையென நம்பும் பலர், மோசடி கும்பல் அனுப்பும் QR code - ஐ ஸ்கேன் செய்து அடுத்தக்கட்ட நடவடிக்கைக்காக காத்திருக்கின்றனர். வாடிக்கையாளர்கள் QR code - ஐ ஸ்கேன் செய்த அடுத்த 5 நிமிடங்களுக்குள் அவர்களின் அக்கவுண்டில் இருக்கும் பணத்தை மொத்தமாக மோசடி கும்பல் சுருட்டிவிடுகின்றனர். ஆன்லைன் மோசடி கும்பலின் சூழ்ச்சியில் விழுந்தால், வங்கி அக்கவுண்டில் இருக்கும் மொத்த பணமும் காலியாகிவிடும். ஷாப்பிங் மால், கடைகள் உள்ளிட்டவற்றில் பணம் செலுத்துவதற்கான தேவை இருந்தால் மட்டுமே QR code - ஐ ஸ்கேன் செய்ய வேண்டும் என கூறியுள்ள எஸ்.பி.ஐ வங்கி போலியாக தொலைபேசிகளுக்கு வரும் மெசேஜ்களை ஸ்கேன் செய்ய வேண்டாம் எனக் கூறியுள்ளது.
கிடுகிடுவென உயர்ந்தது தங்கம் மற்றும் வெள்ளியின் விலை... இன்றைய விலை எவ்வளவு தெரியுமா?
எஸ்.பி.ஐ வங்கி, வாடிக்கையாளர்களின் போன் நம்பர், OTP மற்றும் தனிப்பட்ட தகவல்கள் எதனையும் கேட்காது எனவும் விளக்கமளித்துள்ளது. சந்தேகம் இருந்தால் வாடிக்கையாளர் மையம் மற்றும் அருகில் இருக்கும் வங்கி கிளைகளுக்கு சென்று நேரடியாக விசாரித்து உண்மையை தெரிந்து கொள்ளுமாறும் அறிவுறுத்தியுள்ளது. இமெயில் மற்றும் தொலைபேசிகளுக்கு சந்தேகத்துக்கு இடமளிக்கு வகையில் வரும் போலி QR Code -களை ஸ்கேன் செய்ய வேண்டாம் என இந்திய ராணுவமும் எச்சரித்துள்ளது. குறிப்பாக, பரிவர்த்தனை செய்யக்கோரி அல்லது உங்களின் பாஸ்வேர்டை கேட்கும் மெசேஜ்களை முற்றிலுமாக புறம்தள்ள வேண்டும் எனக் கூறியுள்ளது.