தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில் 5-வது தமிழ்நாடு பிரிமீயர் லீக் (டி.என்.பி.எல்.) 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஜூன் 4-ந் தேதி முதல் ஜூலை 4-ந் தேதி வரை நடத்தப்படுகிறது.

தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில் 5-வது தமிழ்நாடு பிரிமீயர் லீக் (டி.என்.பி.எல்.) 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஜூன் 4-ந் தேதி முதல் ஜூலை 4-ந் தேதி வரை நடத்தப்படுகிறது. நெல்லை, திண்டுக்கல், சேலம், கோவை ஆகிய இடங்களில் இந்த போட்டி நடைபெறுகிறது. தொடக்க ஆட்டம் நெல்லையிலும், இறுதிப்போட்டி சேலத்திலும் அரங்கேறுகிறது. கொரோனா தடுப்பு பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றி நடைபெறும் இந்த போட்டியில் நடப்பு சாம்பியன் சேப்பாக் சூப்பர் கில்லீஸ், சேலம் ஸ்பார்டன்ஸ், கோவை கிங்ஸ், மதுரை பாந்தர்ஸ், திருச்சி வாரியர்ஸ், நெல்லை ராயல் கிங்ஸ், திண்டுக்கல் டிராகன்ஸ், திருப்பூர் தமிழன்ஸ் ஆகிய 8 அணிகள் கலந்து கொள்கின்றன. ஒவ்வொரு அணியும் மற்ற அணியுடன் தலா ஒரு முறை லீக் ஆட்டத்தில் மோத வேண்டும். லீக் முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் ‘பிளே-ஆப்’ சுற்றுக்கு தகுதி பெறும்.

இதற்கான போட்டி அட்டவணை நேற்று வெளியிடப்பட்டது. இதன்படி தினசரி போட்டிகள் இரவு 7.30 மணிக்கு தொடங்கும். இரண்டு ஆட்டங்கள் இருக்கும் நாளில் முதல் ஆட்டம் மாலை 3.30 மணிக்கு ஆரம்பமாகும். உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி நடைபெறும் நாட்களில் (அதாவது ஜூன் 19, 20, 22-ந் தேதிகளில்) போட்டிகள் காலை 11 மணிக்கு தொடங்கி நடைபெறும்.

தொடக்க லீக் ஆட்டத்தில் (ஜூன் 4) திண்டுக்கல் டிராகன்ஸ்-திருப்பூர் தமிழன்ஸ் அணிகள் மோதுகின்றன. சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி தனது லீக் ஆட்டங்களில் ஜூன் 5-ந் தேதி நெல்லை ராயல் கிங்சையும், ஜூன் 10-ந் தேதி திண்டுக்கல் டிராகன்சையும், ஜூன் 12-ந் தேதி திருப்பூர் தமிழன்சையும், ஜூன் 15-ந் தேதி சேலம் ஸ்பார்டன்சையும், ஜூன் 17-ந் தேதி கோவை கிங்சையும், ஜூன் 23-ந் தேதி திருச்சி வாரியர்சையும், ஜூன் 27-ந் தேதி மதுரை பாந்தர்சையும் எதிர்கொள்கிறது.