கொரோனா 2-வது அலை பரவல் எதிரொலியாக வேளாங்கண்ணி மாதா பேராலயத்திற்குள் பக்தர்கள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டதால் வாசலில் நின்று பிரார்த்தனை செய்தனர்.

நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் புனித ஆரோக்கிய மாதா பேராலயம் உள்ளது. இந்த ஆலயத்திற்கு வெளிநாடு, வெளி மாநிலங்கள், வெளியூர்களில் இருந்து ஏராளமானோர் வந்து செல்கின்றனர்.

இந்த ஆலயம் கீழை நாடுகளின் ‘லூர்து நகர்' என அழைக்கப்படுகிறது. இந்த பேராலயத்திற்கு எதிரே வங்க கடல் அமைந்திருப்பது மேலும் சிறப்பு.

இந்தியாவில் கொரோனா தொற்று இரண்டாவது அலை மிக தீவிரமாக பரவி வருகிறது. அதனை கட்டுப்படுத்துவதற்கு மத்திய, மாநில அரசுகள் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. மேலும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் ஆலயங்களில் நடைபெறக்கூடிய திருவிழாக்கள், மத கூட்டங்கள் மற்றும் கடற்கரையில் கூட்டம் கூட தமிழக அரசு தடை விதித்துள்ளது.

தமிழக அரசின் வழிகாட்டுதலின்படி ஆலயங்களில் நேற்று முதல் பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை.

அதன்படி வேளாங்கண்ணி பேராலயத்திற்குள் செல்ல பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.. இதை தொடர்ந்து பேராலயத்தின் முன் கதவு சாத்தப்பட்டு பக்தர்கள் இன்றி திருப்பலி மற்றும் பிரார்த்தனைகள் நடைபெற்றது. இதனால் ஏமாற்றம் அடைந்த பக்தர்கள் பேராலய. வாசலில் மெழுகுவர்த்தி ஏற்றி பிரார்த்தனை செய்தனர்.

கடற்கரைக்கு செல்ல சுற்றுலா பயணிகள் மற்றும் பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.