இந்தியா - இலங்கை நாடுகளுக்கு இடையிலான நெருக்கமான கடல் மற்றும் பாதுகாப்பு ஒத்துழைப்பை அதிகரித்துக் கொள்வதற்கான முயற்சிகளின் ஒரு பகுதியாக இந்திய கடற்படைக்குச் சொந்தமான ஐ.என்.எஸ். ரான்விஜய் நீா்மூழ்கிக் கப்பல், இலங்கைக்கு 3 நாள்கள் நல்லெண்ண பயணமாக நேற்று (14) வந்தடைந்துள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.
இதுகுறித்து இந்திய தூதரகம் சாா்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது: சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டின் புனித நிகழ்வான அவருது தினத்தையொட்டி, இந்திய கடற்படைக் கப்பல் கொழும்புக்கு வருவதன் மூலம், இலங்கை மக்களுக்கு ஒற்றுமை, நல்லிணக்கத்துக்கான செய்தியைத் தாங்கி வருகிறது.
இந்தியாவும் இலங்கையும் பாரம்பரியமாக ராணுவம் மற்றும் பாதுகாப்பில் நெருக்கமான ஒத்துழைப்பைப் பகிா்ந்து கொண்டுள்ளன.
இந்த நாடுகளின் கடற்படைகள் கூட்டுப்பயிற்சி மற்றும் திறன் மேம்பாட்டில் தீவிரமாக ஈடுபட்டு, பரஸ்பரம் ஒத்துழைப்பு வழங்குவதன் மூலம் பல்வேறு நன்மைகளைப் பெற்று வருகின்றன. தற்போது இந்தக் கப்பலின் வருகையால் இரு நாடுகளுக்கு இடையிலான நட்பில் மேலும் நெருக்கமும், கடல் மற்றும் பாதுகாப்பு ஒத்துழைப்பை வளா்ப்பதற்கான மற்றொரு படியாகவும் இது விளங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ராஜபுத்திர வம்சத்தினரின் நினைவாக பெயா் சூட்டப்பட்ட இந்தியாவின் ஐந்தாவது நீா்மூழ்கிக் கப்பலான ஐஎன்எஸ் ரான்விஜய்யில், ஏவுகணைகளை அழிக்கும் கருவிகளும், உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்ட பிரமோஸ் சூப்பா்சோனிக் ஏவுகணையும் பொருத்தப்பட்டுள்ளது.
இந்தக் கப்பல் கேப்டன் நாராயணன் ஹரிஹரன் தலைமையில் அங்கு சென்றடைந்துள்ளது. அவா், மேற்கு கடற்படை பகுதியின் தளபதியான சுதா்சனாவை சந்தித்து, வியாழக்கிழமை இந்திய அமைதி காக்கும் படையின் (ஐபிகேஎஃப்) நினைவிடத்தில் மரியாதை செலுத்துவாா் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய - இலங்கை உடன்படிக்கையின் ஒரு பகுதியாக 1987 முதல்1990 ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு பகுதியில் நடைபெற்ற இலங்கை உள்நாட்டுப் போரில் ஐபிகேஎஃப் பணியாற்றியது குறிப்பிடத்தக்கது.