மஹியங்கனை - மாப்பாகடவெவ பகுதியில் இளம் வயது தாயொருவர் தனது கைக்குழந்தையுடன் கிணற்றில் குதித்து தற்கொலைக்கு முயற்சித்த நிலையில், குழந்தை உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது. இது குறித்து மேலும் தெரிய வருகையில்,

குறித்த இளம் தாய்க்கும், அவரது கணவருக்குமிடையில் குடும்பப் பிரச்சினையொன்றின் காரணமாக கடுமையான வாய்த்தர்க்கம் ஏற்பட்டது.

இதனையடுத்து, மன வேதனை அடைந்த தாய் தனது பதினைந்து மாத ஆண் குழந்தையையும் தூக்கிக் கொண்டு, கிணற்றில் பாய்ந்து தற்கொலை செய்ய முயன்றுள்ளார்.

இதன்போது குறித்த சம்பவத்தைக் கண்ட அயலவர்கள் ஓடிச் சென்று, கிணற்றில் இருந்து தாயையும் குழந்தையையும் மீட்டனர்.

மீட்கப்பட்ட இருவரும் உடனடியாக மஹியங்கனை பொது வைத்தியசாலைக்கு கொண்டு அனுப்பப்பட்ட போதிலும், மீட்கப்பட்ட கைக் குழந்தை இறந்து விட்டதாகவும், தாயைக் காப்பாற்ற முடியுமென்றும் வைத்தியர்கள் தெரிவித்தனர். இதனால் அயலவர்களும், குடும்ப உறவினர்களும் சோகத்தில் மூழ்கியுள்ளனர்.

இந்த நிலையில் இச்சம்பவம் குறித்து, மஹியங்கனை பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.