தஞ்சை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. ஒற்றை இலக்கத்தில் இருந்த எண்ணிக்கை தற்போது இரட்டை இலக்கமாக மாறி வருகிறது. அதிலும் குறிப்பாக பள்ளி மாணவ-மாணவிகள், ஆசிரியர்களிடையே தொற்று அதிகரித்து வருகிறது.

 


ஏற்கனவே தஞ்சை, கும்பகோணம், பட்டுக்கோட்டை, அம்மாப்பேட்டை உள்ளிட்ட பள்ளிகளில் மாணவ, மாணவிகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அந்த பள்ளிகளில் பயிலும் பிற மாணவ, மாணவிகள் மற்றும் அவர்கள் வசிக்கும் இடங்களிலும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அதன்படி தஞ்சை மாவட்டத்தில் 11 பள்ளிகளில் 198 மாணவ, மாணவிகள் பாதிக்கப்பட்டு இருந்தனர். இந்த நிலையில் தஞ்சை மாவட்டம் திருப்பனந்தாள் அரசு உதவி பெறும் பள்ளியில் பயிலும் 3 மாணவர்களுக்கும், திருவையாறில் உள்ள தனியார் பள்ளியில் பயிலும் 4 மாணவர்களுக்கும் என மொத்தம் 7 மாணவர்களுக்கு நேற்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து பாதிக்கப்பட்ட மாணவர்கள் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதன் மூலம் தஞ்சை மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட பள்ளிகளின் எண்ணிக்கை 13 ஆகவும், மாணவர்கள் எண்ணிக்கை 205 ஆகவும் அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.