தேங்காய் எண்ணெயில் அடங்கியுள்ள புற்றுநோயை ஏற்படுத்தக்கூடிய இரசாயனத்தைப் பரிசோதனை செய்வதற்கான, மாதிரிகளின் ஆய்வுகள் தொடர்வதாக நுகர்வோர் அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
நாடு முழுவதும் உள்ள வர்த்தக நிலையங்களில், இன்று முதல் எழுமாறான முறையில் பரிசோதனைகளை மேற்கொள்ள உள்ளதாக அதிகார சபையின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
குறித்த தேங்காய் எண்ணெயை கொண்டுவந்துள்ள இரண்டு பிரதான நிறுவனங்களிடம் இருந்து, பரிசோதனைக்கு உட்படுத்துவதற்காக நேற்று தேங்காய் எண்ணெய் மாதிரிகள் பெற்றுக்கொள்ளப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இறக்குமதி செய்யப்பட்ட, சுத்திகரிக்கப்படாத 8 ஆயிரம் மெற்றிக் டொன் தேங்காய் எண்ணெய், நேற்று முன்தினம் இரவு கொழும்பு துறைமுகத்தில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இறக்குமதி செய்யப்பட்ட 13 தேங்காய் எண்ணெய் கொள்கலன்கள் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளில், அதில் புற்றுநோயை ஏற்படுத்தக்கூடிய இரசாயனம் அடங்கியுள்ளதாக கண்டறியப்பட்டுள்ள நிலையில், இந்தத் தகவலும் வெளியாகியுள்ளது.
இறக்குமதி செய்யப்பட்ட 13 தேங்காய் எண்ணெய் கொள்கலன்களில் உள்ள தேங்காய் எண்ணெயில் புற்றுநோயை ஏற்படுத்தக்கூடிய இரசாயனம் அடங்கியுள்ளதாக பாரம்பரிய தேங்காய் எண்ணெய் உற்பத்தியாளர்கள் சங்கத்தினால், நேற்று முன்தினம் முதல் முறையாக தகவல் வெளிப்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.