வட கொரியா மேற்கொண்ட குறுந்தூர ஏவுகணை பரிசோதனை ஒரு பெரிய விடயமல்லவென அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.

இது வழமையான ஒரு விடயம் எனவும், புதிய விடயங்கள் எதுவும் இல்லையெனவும் அமெரிக்க அதிபர் குறிப்பிட்டுள்ளார்.

ஐ.நா பாதுகாப்புச் சபையின் தீர்மானங்களை மீறாத வகையில் பொலிஸ்டிக் அல்லாத ஏவுகணைகளை வார இறுதியில் பரிசோதித்ததாக வட கொரியா தெரிவித்துள்ளது.

அமெரிக்கா மற்றும் தென் கொரியா கூட்டு இராணுவப் பயிற்சிகளை நடத்தியதாக வட கொரியா விமர்சனம் வெளியிட்ட நிலையில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

வடகொரியா ஏவுகணையை பரிசோதித்தமை குறித்து முதலில் அமெரிக்க ஊடகங்களால் அறிவிக்கப்பட்ட நிலையில், பின்னர் அமெரிக்க மற்றும் தென் கொரிய பாதுகாப்பு அமைச்சுக்களால் அது உறுதிப்படுத்தப்பட்டது.

வட கொரியாவின் ஒஞ்சானில் இருந்து கடந்த ஞாயிற்றுக்கிழமை அதிகாலை இரண்டு ஏவுகணைகள் மஞ்சள் கடலில் ஏவப்பட்டதாக தென் கொரியா தெரிவித்துள்ளது.

வடகொரியாவின் இந்த செயற்பாடு தொடர்பாக நேற்றைய தினம் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அமெரிக்க அதிபர் "அமெரிக்க பாதுகாப்புத் துறை இதை ஒரு தூண்டுதலாகக் கருதவில்லை என்றும் இது வழக்கமாக நடக்கும் செயல்” என்றும் தெரிவித்துள்ளார்.

அத்துடன் வட கொரியாவுடன் தொடர்பு கொள்ள முயற்சித்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.